ஒவ்வொரு மனிதனின் வலியை பேசும் ‘வள்ளுவன்’

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார்.

படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் சங்கர் சாரதி பேசும்போது “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்” என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன்.

அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ? இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.