விமர்சனம்: டபுள் (காமெடி) டக்கர்

தமிழ் சினிமாவில் அனிமேஷன் கேரக்டர்கள் ஒரு சில காட்சிகளில் இடம்பெறும். ஆனால் ஹாலிவுட் படம் போன்று ஒரு படம் முழுவதும் அனிமேஷன் கேரக்டர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம் இது.

இளம் வயதில் நடந்த ஒரு விபத்தில் முக அழகை இழந்த பணக்கார இளைஞனான அரவிந்த் (தீரஜ்) தாழ்வு மனப்பாண்மையிலேயே வாழ்கிறார். காதலியையும் அவரை தள்ளி வைக்க… தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரது உயிரை எடுத்து கடவுளிடம் கொண்டு சேர்க்க அந்தக்கால எமதர்மன் போன்று இந்தக் காலத்தில் அனிமேஷன் கேரக்டர்களா ரைட்டும், லெப்டும் வருகிறார்கள். ஆனால் விதிப்படி 80 வயதில் சாக வேண்டிய அரவிந்த் தவறான கணக்கால் இப்போதே உயிரிழக்க காரணமாகி விடுகிறார்கள். இதனால் அரவிந்தை மீண்டும் உயிர்பித்து அவருடைய உடலோடு இணைக்க முயற்சிக்கும்போது உடலை பணத்துக்கா சிலர் கடத்திக் கொண்டு சென்று விடுகிறார்கள். அரவிந்த் எப்படி உயிர் பிழைக்கிறார் என்பதும் அதற்குள் நடக்கும் காமெடி கலாட்டாவும்தான் படம்.

ரஜினி நடித்த ‘அதிசயபிறவி’ படத்தை அப்படியே உட்லாங்கடி செய்து அனிமேஷன் கேரக்டர்களை இணைத்து இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மீரா மகதி. நாயகி ஸ்மிருதி வெங்கட்டிற்கு பெரியதாக வாய்ப்பில்லை என்றாலும் கிடைக்கிற கேப்பில் நடிக்கிறார். தீரஜ் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வில்லன் மன்சூரலிகான் நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் பதியும் கேரக்டரில் நடித்திருக்கிறார். கோவை சரளா, முனீஷ்காந்த், காளி வெங்கட், சாரா, சுனில் ரெட்டி, கருணாகரன் என பெரிய காமெடி பட்டாளமே இருக்கிறது. வித்யா சாகரின் இசையும், கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ். அனிமேஷன் கேரக்டர்களை நல்லதொரு தொழில்நுட்ப தரத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

லாஜிக் பார்க்காமல் கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு ஒரு விசிட் அடிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.