ரஜினி படத்தை தயாரிப்பேன்: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தகவல்

 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரி’கும் படம் பிடி சார். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயன் ஹிப்ஆப் தமிழா ஆதி பேசியதாவது: எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி.

அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி. என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேசியதாவது:
வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லாப்பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும் நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர், அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரவுள்ளோம்.
ஆதி தான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக அரண்மனை 4ல் கலக்கியிருக்கிறார். அதே போல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் நன்றி. என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் “சிம்பு எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் ரஜினியை சந்தித்தேன் அவரும் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தருவாக சொல்லியிருக்கிறார். இரண்டு நல்ல செய்திகளும் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.