‘கன்னி’ விமர்சனம்: பாரம்பரியத்தை காப்பாற்றும் மலைவாழ் வீராங்கனை

மலைகிராமத்தில் வாழும் ஹீரோயின் அஸ்வினி சந்திரசேகரின் குடும்பம் பாரம்பரியமாக மூலிகை வைத்தியத்தை காப்பாற்றி வருகிறது. அதனை திருடி கார்பரேட் கம்பெனி ஒன்று கோடி கோடியாய் சம்பாதிக்க திட்டமிடுகிறது. இதற்காக ஒரு கூலி படையை அனுப்புகிறது. அந்த கூலிப்படை அஸ்வினியின் குடும்பதை அழித்து மூலிகை ரகசியத்தை கைப்பற்ற செல்கிறது. குடும்பமே பலியாகி விட அஸ்வினி தனது அண்ணன் மகள், மற்றும் மகனுடன் தப்பித்து தனது தாத்தா வசிக்கும் கிராமத்துக்கு வருகிறாள் அங்கும் கூலிப்படை துரத்துகிறது. தனி மனுஷியாக போராடி எப்படி பாரம்பரிய மருத்துவத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

அஷ்வினி சந்திரசேகர் மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என்று அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் .கொஞ்சம் கூட நடிப்பு என்று தெரியாமல் அந்த சேம்பியாகவே வாழ்ந்துள்ளார். அதேபோல வேடனாக வரும் மணிமாறன், அவரது மனைவி நீலிமாவாக வரும் தாரா கிரிஷ் இருவரும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் ராம் பரதனும் மலைவாசி மனிதராகவே மாறியுள்ளார். இவர்கள் தவிர படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட நடிப்பில் யதார்த்தம் காட்டி அந்த மலைக் கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே நடித்துள்ளார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே புள்ளஹள்ளி ,மற்றும் ஜவ்வாது. மலைப்பகுதியில் காடு, பாறைகள் நிறைந்த கரடுமுரடான இடங்களில் பல்வேறு கோணங்களில் படமாக்கி கண்முன்னே அழகான ஓவியங்களாகக் காட்சிகளைப் படப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார்.முழுக்க முழுக்க இயற்கை வெளிச்சத்திலேயே படமாக்கி உள்ளார். யதார்த்தமாக மட்டுமல்ல அழகியலும் நிறைந்த காட்சிகள் படத்தின் பெரும் பலம்.

உணர்வுகளைத் தனது பின்னணி இசையால் பேச வைத்துள்ளார் இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்.குறிப்பாக உச்சகட்ட காட்சியில் வசனங்களே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. அவரது பின்னணி இசை தான் பேசுகிறது.
பாடல் இசையிலும் குறையில்லை . குறிப்பாக
‘சாய்ந்தாடும் ஆகாயமே தோள் சேரும் பூலோகமே ‘ மனித நல்லுணர்வுகளின் குரலாக ஒலிக்கிறது.

எளிதில் நுழையாத லொக்கேஷன்களில் தேடிப் போய் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள். படத்தில் ஏதோ ஒரு போதாமையை உணர முடிகிறது. சொல்ல வேண்டிய கருத்துக்களை, உணர்வுகளை அழுத்தமான காட்சிகளால் உருவாக்காமல் மேலோட்டமாக கதை நகர்வது படத்தின் பெரும் பலவீனமாக இருக்கிறது.

படத்தில் சித்த மருத்துவத்தின் மகிமை பற்றிப் பேச முயன்றுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் நம் பாரம்பரியத்தை வணிகப்படுத்தும் முயற்சியில் இருப்பதும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவுமே அழுத்தமாகச் சொல்லப்படாதது பெரிய குறையாக உள்ளது.
படத்தில் சில பாத்திரங்களுக்கு அழுத்தமான காரணம் இல்லாததால் ஒட்ட மறுக்கின்றன. வணிக சூத்திரங்களுக்கு உட்படாத, ஆபாசக் கலப்பில்லாத தரமான படைப்பாக தந்திருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவா தொரப்பாடி.

 

Leave A Reply

Your email address will not be published.