கதையின் நாயகி அக்ஷயா தனது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறாள். அவளது காதலன் உல்ப் (வெற்றி) அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு இரவு முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறார். மற்றொரு ரவுடி சைலண்ட் (முருகன்) ஓடிப்போன தனது தங்கையை தேடுகிறார். இந்த இரண்டும் சந்திக்கிறபோது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வெற்றி இதில் வழக்கம்போல இறுக்கமான முகத்துடன் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதையை தேர்வு செய்த வெற்றி, நடிப்பையும் வித்தியாசமாக தந்திருக்கலாம். படத்தின் இயக்குநர் முருகன் ‘சைலண்ட்’ டாக வருகிறார். படம் முழுக்க பயத்துடன் வரும் நாயகி அக்ஷயா கந்த அமுதன் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். நகைச்சுவை நடிகரான சாப்ளின் பாலுவுக்கு இதில் குணச்சித்திர கதாபாத்திரம் நிறைவாக செய்திருக்கிறார்
இரவு நேர காட்சிகளை அற்புதமாக படம்பிடித்திருக்கிறது அபிலாஷ் ஒளிப்பதிவு. விவேக் சரோவின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.
இன்ஸ்பெக்ட்ராக சாய் தீனா மற்றும் அவரது போலீஸ் கேங் செய்யும் கோமாளித்தனங்கள் எரிச்சலூட்டுகிறது. ஹைப்பர்லிங்க் பாணியிலான கதையை எழுதியுள்ள இயக்குநர் முருகன், எந்தவித சுவாரஸ்யமான உணர்வையும் ஏற்படுத்தாமல் குழப்பமான ஒரு படத்தையே தந்திருக்கிறார்.