பள்ளி பருவத்தில் வரும் காதல் வெறும் இனக் கவர்ச்சிதான், கல்லூரி பருவத்தில் வரும் காதலில் கவனம் வேண்டும், நல்ல காதல் காலம் கடந்து வாழும் என்கிற கருத்தை 3 விதமான காதல் கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஞான ஆரோக்கிய ராஜா.
அவரது கதைக்கு சந்தோஷ் சரவணன், விதுஷ், மனிஷா, மீனா உயிர்கொடுக்க முயற்சிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களான மனோபாலா, தேவதர்ஷினி காதல் நாடகத் தன்மையாக இருந்தாலும் உயிர்ப்பாக இருக்கிறது. இருவரையும் பள்ளி மாணவர்களாக நடிக்க வைத்து ஆச்சர்யமூட்டுகிறார் இயக்குனர்.
சிங்கம்புலி, சிசர் மனோகர், தீப்பெட்டி கணேசன், போண்டாமணி, நெல்லை சிவா, முத்துகாளை என ஒரு காமெடி பட்டாளமே படத்தில் இருக்கிறது. ஓரளவிற்கு சிரிக்கவும் வைக்கிறார்கள். அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்தின் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் கதையோடு கேட்கும்போது இதமாக இருக்கிறது. கேரளாவில் எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சியில் கண்ணுக்கு குளுமை தருகிறார் ஒளிப்பதிவாளர் ஜோ. காதலும் வாழ்க்கையும் தோற்கும் நேரத்தில் வரும் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல் உருக வைக்கிறது.
படத்தில் 3 காதலை சொன்ன இயக்குனர் மூன்றையும் தனித்தனி படமாகவே தந்திருக்கலாம் எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்லியிருப்பதுதான் படத்தின் பலவீனம், அதுவே பலமாகவும் அமைந்திருக்கிறது. ஆரோக்கியமான மெசேஜ் தரும் எளிமையான படம்.