கிராமத்து சிறுமி துர்கா பிற உயிர்களின் மீது நேசம் கொண்டவள். அவள் ஒரு ஆட்டுக்குட்டியை கண்டெடுத்து அதற்கு ‘புஜ்ஜி’ என்று பெயரிட்டு அன்போடு வளர்க்கிறாள். ஆனால் அவள் அண்ணன் சரவணன் புஜ்ஜியை ஒரு உணவு பொருளாக பார்க்கிறான். ஒரு முறை அது காணாமல் போக மனம் மாறிய சரவணன் அதை தேடி கண்டுபிடித்து கொடுக்கிறான். இந்த நிலையில் புஜ்ஜியை குடிகார தந்தை, கசாப்பு கடைக்காரனுக்கு விற்று விட அதைக் காப்பாற்ற துர்காவும், சரவணனும் புறப்படுகிறார்கள். புஜ்ஜி அவர்களுக்கு கிடைத்ததா என்பது படத்தின் கதை.
புஜ்ஜியை தேடிச் செல்லும் அவர்கள் நகரத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களை சந்திக்கிறார்கள். சிலர் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள், மற்றவர்கள் அவர்களை வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள். புஜ்ஜியுடன் துர்காவும் அவளது சகோதரர் சரவணனும் பழகும் விதத்தில் ஒருவித இனிமை இருக்கிறது. புஜ்ஜியை மீட்பதற்கான குழந்தைகளின் தேடலானது ‘குழந்தைகள் ஏன் தனியாக வெளியே செல்லக்கூடாது’ என்ற கதையாக மாறுகிறது. இதனால் இரண்டு நோக்கங்களை கொண்ட கதையாகிறது.
இந்த குழந்தைகளுக்கு காட்பாதராக கமல் குமாருக்கு நல்ல நடிப்பு. நக்கலைட் வைதீஸ்வரி குழந்தையின் அம்மாவாக நேர்த்தியாக நடித்துள்ளார். ஒரு லேடி கான்ஸ்டபிள் மாதிரி தேவையற்ற கதாபாத்திரங்கள் படம் முழுக்க இருக்கிறது. கடைசி 30 நிடத்துக்கு முன்பு வரை புஜ்ஜி நமது மனசுக்கு நெருக்கமாகவில்லை. இந்த குறைகளை இயக்குனர் ராம் கந்தசாமி சரி செய்திருந்தால் தரமான படமாக அமைந்திருக்கும்.