இந்த படத்தில் இரண்டு நாசர்கள், ஒருவர் சர்ச் பாதிரியார் நன்மையின் பக்கம் நிற்பவர். மற்றவர் சாத்தான்களின் பக்கம் நிற்பவர். இதனால் சாத்தான்களின் கடவுளான அக்காலிக்கு மனிதர்களை கொன்று படைத்து அதீத சக்தி அடைய நினைக்கிறார். அதை தடுக்க சர்ச் பாதிரியார் போராடுகிறார். இதுதான் படம் சொல்ல வரும் கதை.
ஆனால் படம் முழுக்க போலீஸ் அதிகாரி ஜெயக்குமார் சாத்தானை தேடி செல்வதும், சாத்தான் அடியாட்களை அனுப்பி தன்னை தேடி வருகிறவர்களை அழிப்பதுமாக கடக்கிறது கதை.
தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, யாமினி, தாரணி, மாசிஹா சபீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகமது ஆசீப் ஹமீத் எழுதி இயக்கி இருக்கிறார்.
சாத்தானின் தீய சக்திக்கும், கடவுளின் நல்ல சக்திக்கும் இடையில் நடக்கும் வழக்கமான போராட்ட கதைதான். அதை லாஜிக் பார்க்காமல் சுவாரஸ்யமான படமாக தந்திருக்கலாம்.
இரண்டு மணி நேரம் 25 நிமிடம் ஓடும் படம் இரண்டு படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது . எல்லா கேரக்டர்களும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . அல்லது யாரோ யாரையோ துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அனிஷ் மோகனின் பின்னணி இசை, தோட்டா தரணியின் கலை இயக்கம், கிரி மர்பியின் ஒளிப்பதிவு மட்டுமே படத்திற்கு பிளஸ். மற்றபடி ஒரு கதையை சினிமா மொழியில் எப்படிச் சொல்ல என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்