தேனி அருகில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோவில் நகைகளுடன் சேர்ந்திருக்கிறது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்று தனது மைத்துணர் மைம் கோபியை களத்தில் இறக்குகிறார்.
கோவிலை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும். இதற்காக இருவரையும் பகையாளியாக்குகிறார் மைம்கோபி. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, சூரியின் விசுவாசத்துக்கான காரணம், நடுவே இழையோடும் காதல், கதைப்போக்கில் வந்துபோகும் காமெடி, துரோகம், திருப்பங்கள் என விறுவிறுப்பாக செல்கிறது படம். கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது, என அதீத வன்முறை இருந்தாலும் சூரியின் வெள்ளிந்திரியான மனசும், சசிகுமாரின் நடிப்பும் அதை சரி செய்கிறது.
கோயில் திருவிழாவில் வெறித்தனமான ஆடுவது, விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வு, நியாயத்துக்கும் – உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பது, சிங்கிள் ஷாட் வசனங்கள், கதறி அழும் காட்சி, ஆக்ஷன் பரிணாமம் என மொத்த படத்தையும் ஆக்கிரமித்து கொள்கிறார் சூரி.
சசிகுமாருக்கு வழக்கம்போல நட்புக்கு கரம் கொடுக்கிற கேரக்டர். மனைவியாக வரும் ஷிவதா. அனுபவ நடிப்பில் மிளிர்கிறார் வடிவுக்கரசி. ரோஷினி ஹரிபிரியன், ரேவதி ஷர்மா, பிரகிடா தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார் தேர்ந்த நடிப்பை தந்திருக்கிறார்கள்.
யுவனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு நல்லதொரு தியேட்டர் அனுபவத்தை தருகிறது. மொத்தத்தில் தவறவிடக்கூடாத படம்.