ஏழை விவசாயியான சர்க்கார் (விதார்த்) தனது மனைவி லட்சுமி (வாணி போஜன்) மற்றும் மகன் அருந்தவம் (கிருத்தி’ மோகன்) மற்றும் மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது மகனு’கு மருத்துவராக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. மகனது கனவை நனவாக்க நினைக்கிறார் தந்தை சர்க்கார். அதன்படி மத்திய அரசின் மருத்துவ கல்வி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், அவர்களுக்கான தேர்வு மையம் ஜெய்ப்பூரில் ஒதுக்கப்படுகிறது.
இதனால் கடும் துன்பங்களை தாண்டி, தந்தையும், மகனும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக ஜெய்ப்பூர் செல்ல, அங்கு என்ன நடக்கிறது, தகுதி தேர்வில் மகன் தேறினாரா? தகுதித் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? அது எப்பபடி பெற்றோர்களை பாதிக்கிறது என்பது படத்தின் கதை.
அரசுப் பள்ளியில் படித்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது மருத்துவ கனவை அடைய, ‘தகுதித் தேர்வு’க்கு எத்தனை அழுத்தங்களுடன் தயாராக வேண்டியிருக்கிறது, ‘கோச்சிங் சென்டர்’ அதற்கான பணம், பெற்றோர்களுக்கான பொருளாதார நெருக்கடி, கடைசி நேர பதற்றங்கள், நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வட மாநிலங்களில் ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள் என பல்வேறு பிரச்சினைகளை பேசியிருக்கிறார் இயக்குநர் சுப்புராமன்.
கதைக்கருவும், நோக்கமும் சரியானதுதான் என்றாலும் அதை நாடகத்தன்மையோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, கோர்ட் டிராமா காட்சிகள் தனித்து நிற்கிறது. காவல் துறை அதிகாரியாக இருக்கும் ரகுமான் திடீரென வழக்கறிஞராக மாறுவது, அவரின் பழைய வழக்குக்கு நீதிமன்றத்தில் வைத்து கைது செய்வது, மாணவனே தனது வழக்கை வாதாடுவது, நினைத்த நேரத்தில் அமைச்சரை அழைத்து நீதிமன்றத்தில் நிற்க வைப்பது, ரயில் புறப்பட தாமதமானதால் ரயில்வே அதிகாரியை நீதிமன்றத்தில் அழைத்து விசாரிப்பது என சாத்தியமற்ற விஷயங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பொருளாதார சிக்கலை தாங்கி கொண்டு மகனின் கனவுக்காக போராடும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தந்தையாக உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார் விதார்த். அவருக்கு இணையாக வாணி போஜன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ரகுமான் நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார். சில குறைகள் இருந்தாலும் தரமான படமாக தடம் பதிக்கிறது.