‘மஹாராஜா’ 50வது படமானது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்

 

விஜய்சேதுபதியின் 50வது படம் ‘மஹாராஜா’. இதில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கி உள்ளார். வருகிற 14ம் தேதி வெளிவருகிறது.

படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறியதாவது: இந்த படம் ஆரம்பிக்கும்போது இது எனது 50வது படமாக இருக்கும் என்று கருதவில்லை. உதவியாளர்கள் நான் சிறப்பு தோற்றத்தில் நடித்த படத்தை கணக்கில் சேர்க்காமல் உருவாக்கிய கணக்குதான் இது. 50வது படம் என்பது ஒரு எண்ணிக்கைதான். அதில் சிறப்பு எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.

50வது படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும், கலர்புல்லாக இருக்கவேண்டும். பக்கா எண்டர்டெயின்மெண்டாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது 25வது படமே ‘சீதக்காதி’தான். அந்த படம் நன்றாக போகாது என்று தெரிந்தும் நடித்தேன். காரணம் அது முக்கியமான படம், தரமான படம். கலை எல்லோருக்குமானது என்று சொன்ன படம். அந்த படத்தில் நான் 30 நிமிடம்தான் வருவேன்.

அதேபோல இந்தப் படமும் நல்ல கதை, தரமான இயக்குனர் என்பதால் எனது 50வது படம் ஆனது. பிறந்த நாளின்போது கடந்த காலத்தை நினைத்து பார்ப்பது போன்று, நான் கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்க வைக்கும். நான் இன்னும் என்னை நிறைவான நடிகனாக பார்க்கவில்லை. நிறைவடைந்துவிட்டால் அத்தோடு இந்த பயணம் முடிந்து விடும். நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றவற்றை கலையாக மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன்.

இடையில் வில்லனாக நடித்தேன். அது மக்களுக்கு போரடிக்கும் முன்பே அதிலிருந்து விலகி வந்து விட்டேன். எனது அன்பிற்காக அனுராக் காஷ்யப் இதில் நடித்தார். அவரது கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும். மம்தா மோகன்தாஸ் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் புரமோ புஜ் கலீபாவில் திரையிடப்பட்டபோது நான் அதனை பாக்கவில்லை. துபாயில் நான் கஷ்டப்பட்ட காலங்கள்தான் எனது நினைவுக்கு வந்து போனது. பல மொழிகளில் நடிப்பதால் தமிழில் படங்கள் குறைவதாக சொல்கிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. எனக்கு எல்லா மொழிகளிளும் கலைகளின் மொழிகள்தான். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.