தனது வீட்டுக்கு சொந்தம் கொண்டாடி புதிதாக வருகிறவர்களை விரட்டி அடிக்கும் வழக்கமான பேய் கதைதான் இது. என்றாலும் மற்ற படங்களில் அது தனியாக இருக்கும் பெரிய பங்களாவாக இக்கும், இந்த படத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீடு.
படத்தின் நாயகி ஸ்மிருதி வெங்கட்டிற்கு அன்பான கணவன் ராஜீவ், ஒரு மகன். ‘7ஜி’ என்ற அடுக்குமாடி வீட்டை வாங்கி அங்கு குடியேறுகிறாள். கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுகிறான். சில நாட்களுக்கு பிறகு ஸ்மிருதியும் அவர் மகனும் அந்த பிளாட்டில் தனியாக இல்லை என்பதையும் சுற்றிலும் சில சக்திகள் இருப்பதை உணர்கிறார். அது சோனியா அகர்வாலும், அவர் மகளும் என்பதை அறிகிறார். சோனியா அகர்வால் யார்? அவர் ஏன் அந்த வீட்டில் ஆவியாக இருக்கிறார். வீடு சோனியாவுக்கு சொந்தமாகிறதா? ஸ்மிருதிக்கு சொந்தமாகிறதா? என்பது கதை.
இயக்குனர் ஹாரூன் ஒரு வித்தியாசமான த்ரில்லர் படத்தை தர முயற்சித்திருக்கிறார். சோனியா அகர்வாலும், ஸ்மிருதியும் தங்கள் நடிப்பால் ஹாருனுக்கு உதவி இருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கிறார் இசை அமைப்பாளர் சித்தார்த் விபின். அவரது அமுல்பேபி முகத்திற்கு அது செட்டாகவில்லை. சித்தார்த்துக்கு நடிப்பும் வரவில்லை. காமெடி இல்லாத குறையை பக்கத்து வீட்டுக்காரரான சுப்பிரமணியம் சிவாவும், அவரது மனைவியும் தீர்த்து வைக்கிறார்கள்.
கண்ணனின் ஒளிப்பதிவு மற்றும் பிஜு வி டான் போஸ்கோவின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளது. வித்தியாசமான படமாக தொடங்கி வழக்கமான படமாக முடிகிறது. என்றாலும் ஒரு முறை பார்க்கத் தகுந்த படமாகிறது.