பேய் படங்களில் எத்தனையோ வகை பார்த்திருக்கிறோம் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான பேய் பார்க்கலாம். இந்தப் படத்தில் வரும் பேய் ஒரு பாழடைந்த பங்களாவிலோ, ஒரு வீட்டிலோ, அல்லது ஒரு மண்டபத்திலோ, அல்லது சுடுகாட்டிலோ இல்லாமல் ஒரு தாலியில் இருக்கிறது.
நாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ்.
இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதைத் தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயல்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது. பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? தாலி பேயை விரட்டியடித்தார்களா? என்பது படத்தின் கதை.
ஆவிகள் பழி வாங்குவது புதிய கதை அல்ல, ஆனால் அதைத் தாலிக்குள் ஒளித்து வைத்தது, அதிலிருந்து அது எந்தச் சூழ்நிலையில் வெளியே வருகிறது, தாலி கட்டியவனை ஏன் தேடுகிறது என்பதையெல்லாம் ரசிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் எம். ரமேஷ் பாரதி.
ஆவித் துரத்தல், அட்ராசிட்டியில் தியேட்டரே குலுங்குகிறது. ஆவி ரசிகர்களுக்கு சூடான ஆவி பறக்கும் ஹாரர் ரத்தப் பொரியல் .