‘திரெளபதி 2’ மத உணர்வை தூண்டும் படமல்ல: மோகன் ஜி

‘பகாசுரன்’ படத்திற்கு பிறகு மோகன் ஜி இயக்கி உள்ள படம் ‘திரெளபதி &2’. ரிச்​சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப்படத்துக்கு பிலிப் ஆர் சுந்தர், ஒளிப்பதிவு செய்துள்ளார். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்பு நான் இயக்கிய படங்கள் அனைத்தும் உண்மை கதைகள். அதே போன்று இந்த படம் ஒரு சரித்திர உண்மை கதை. தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்ளின் ஆட்சிக்கு முன்பு நடந்த ஹொசாலயர்கள் ஆட்சி காலத்தில் நடந்த கதை. தமிழ் நாட்டிற்குள் இஸ்லாமிய மன்னர்கள், குறிப்பாக முகமது பின் துக்ளக் நுழைந்தார்கள். அவர்கள் வந்த நோக்கம் என்ன அதை இங்குள்ள மன்னர்கள் எப்படி எதிர்த்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் இந்து மன்னர்கள், முகலாக மன்னர்களின் மோதலாக இருந்தாலும், அடிப்படையில் இது மத மோதல் கதை அல்ல. அதனால் இது இந்து முஸ்லிம்களுக்கு இடையே எந்த மோதலையும் ஏற்படுத்தாது. மாறாக ஒரு வரலாற்று உண்மையை சொல்லும். இதற்காக நிறைய ஆய்வு செய்து திரைக்கதை அமைத்துள்ளேன்.

இந்த படம் சரித்திர படமாக இருந்தாலும், நிகழ்கால கதையுடன் ஒரு சின்ன தொடர்பும் இருக்கும். 30 கோடிக்கும் குறைவான செலவில் 31 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். ஆயிரம் இடங்களுக்கு மேல் விஎப்எஸ் காட்சிகள் இருக்கிறது. பெரும்பாலான படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது. சென்னை, அரியலூர், ஜெயம்கொண்டம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

படத்தில் பாடிய சின்மயி பிரச்சினை கிளப்பி படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், பெப்சியிலும் புகார் அளித்துள்ளோம். சின்மயி பாடிய பாடலை நீக்கி விட்டு அதே பாடலை இன்னொரு பாடகியை கொண்டு பாட வைத்துள்ளோம். அதுவே படத்தில் இடம் பெறும்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறேம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.