மலையாளத்தில் ‘மட்டி’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரகபால் தற்போது இயக்கி உள்ள தமிழ் படம் இது.
மதுரையில் ஒத்தகடை பகுதியில் கிடா சண்டை பிரபலமாக இருக்கிறது. இதில் வெற்றி பெரும் கிடா உரிமையாளருக்கு ‘ஜாக்கி’ என்ற பட்டம் கிடைக்கிறது. மதுரையில் பிரபலமாக இருக்கும் கார்த்தி என்ற பணக்காரர் கிடா வளர்த்து கிடா சண்டை பந்தயத்திற்கு விடுகிறார். ஒவ்வொரு முறையும் கார்த்தி வளர்க்கும் கிடாவுக்கே வெற்றி கிடைக்கிறது. இதனால் இறுமாப்புடன் இருக்கிறார் கார்த்தி. ஒரு நாள் மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் ராமர் என்பவர், தான் வளர்க்கும் காளி என்ற பெயர் கொண்ட கிடாவை சண்டையில் இறக்குகிறார்.
இந்த காளி கார்த்தியின் கிடாவை ஜெயித்து விடுகிறது. சண்டையில் கார்த்தியின் கிடாவின் கொம்பை உடைத்து விடுகிறது. ராமருக்கு ஜாக்கி பட்டம் கிடைக்கிறது. இந்த தோல்வியால் கோபம் கொள்ளும் கார்த்தி, ராமருக்கு தனிப்பட்ட பல பிரச்சனைகளை தருகிறார். ஒரு கட்டத்தில் கார்த்தியின் கிடாவை கடத்தி விடுகிறார். கிடா சண்டை தனிப்பட்ட இரு மனிதர்களின் ஈகோவாக மாறி மோதலாக உருவெடுக்கிறது. இந்த மோதல் தரும் விளைவு என்ன என்பதுதான் படத்தின் கதை.
மாட்டை மையமாக வைத்து ஜல்லிக்கட்டு படங்கள் வந்ததை போன்று முதன் முறையாக யாரும் சொல்லாத கிடா சண்டையை மையமாக வைத்து இந்தப் படத்தை தந்திருக்கிறார்கள்.
படத்தில் ஹீரோ யுவன் கிருஷ்ணன், வில்லன் ரிதன் இருவரும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நடிக்கும் ரிதனின் நடிப்பு மிரட்டல். ஹீரோவின் காதலியாக அம்மு அபிராமி குறைவைக்காமல் நடித்திருக்கிறார்.
கிடா சண்டையை படமாக்கிய விதம், அதன் ஒளிப்பதிவு, பின்னணி இசை என தொழில்நுட்ப ரீதியாக மிரட்டி இருக்கிறது. ஜல்லிக்கட்டு ரசிகர்களும் பார்க்கத் தகுந்த மண்ணின் மனம் பேசும் படம்.