மை லார்ட்: வலியோரின் ஆணவமும், எளியோரின் பேரன்பும்

ஜோக்கர், குக்கூ என்ற இரண்டு அற்புதமான படங்களை தந்த ராஜு முருகன், அடுத்த இரு படங்களில் தடுமாறிப் போனார். இப்போது ‘மை லார்ட்’ மூலம் பழைய ராஜு முருகனாக திரும்பி வந்திருக்கிறார்.

கிராமத்து வெள்ளிந்திரி மனுஷன் முத்து சிற்பி (சசிகுமார்). வள்ளலாரின் அருள் வழி நடப்பவர். அவருக்கு உலகமே சுசீலாதான் (சைத்ரா ஆச்சார்). இவர்கள் வாழும் இடத்தில் குடும்ப வறுமையை போக்க சிறு நீரகத்தை விற்பதெல்லாம், அவசரத்துக்கு தங்கத்தை விற்பதை போல சர்வசாதாரணமானனது. இதற்காக தனி கூட்டமே இருக்கிறது.

சுசீலாவுமே ஒரு சிறுநீரகத்தை விற்றவர்தான். ஆனால் முத்து சிற்பியின் சிறுநீரகம் தேவைப்படுவது ஒரு அதிகாரமிக்க மத்திய பெண் அமைச்சர் (ஆஷா சரத்) ஒருவருக்கு. முத்து சிற்பியின் சிறுநீரகம் கிடைத்தால்தான் அதிகாரமும், பதவியும் தொடரும், இல்லாவிட்டால் மரணம் நிச்சயம் என்பது மருத்துவ நிலை.

தனது சகல அதிகாரத்தையும், பணபலத்தையும் கொண்டு முத்து சிற்பியின் சிறுநீரகத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கிறார் அமைச்சரும் அவரது அடிமை படைகளும். அதை எதிர்த்து தனது எளிய சக்தியுடன் மோதுகிறார் முத்து சிற்பி. வென்றது அமைச்சரின் அதிகாரமா, முத்து சிற்பியின் அன்பா என்பதுதான் படத்தின் கதை.
அயோத்தி, சிறை போன்ற மனிதம் பேசிய படங்களின் வரிசையில் வந்திருக்கிறது ‘மை லார்ட்’.

ராஜு முருகனின் படங்கள் வெற்றியோ தோல்வியோ ஆனால் அது பேசும் உண்மைகள் அதிகார வர்க்கத்தை ஆட்டுவிக்கும், அதை சொல்லும் சினிமா மொழியில் அவர் சென்ற படங்களில் தவறி இருந்தாலும், இதனை மிகச் சரியாக சராசரி ரசிகனுக்கும் சென்று சேரும் ரசனை மிகுந்த சினிமாவாக தந்திருக்கிறார்.

மனிதம், நட்பு பேசும் படம் என்றால் எல்லா இயக்குனருக்குமே சசிகுமார்தான் நினைவுக்கு வருவார். மனுஷன் நிஜத்திலும் அப்படித்தானே… இந்த படத்தில் அவர் நடிக்கவே இல்லை. நிஜ சசிகுமார் அந்த கேரக்டரில் பிறந்திருந்தால் எப்படியோ அப்படியேதான் படத்திலும்.

சைத்ரா ஆச்சார்யா சசிகுமாருடன் களத்தில் நின்று விளையாடி இருக்கிறார். ஆணவத் திமிரின் உச்சமாக இருக்கும் இப்போதைய ஒரு பெண் மத்திய அமைச்சரை திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஆஷா சரத். இன்றைய சமூக ஊடங்களின் மைனஸ், பிளஸ் இரண்டையும் கொண்டு வந்து சேர்க்கிறார் குரு.சோமசுந்தரம்.

நீரவ்ஷாவின் மிகையில்லா ஒளிப்பதிவு படத்தை உண்மைக்கு நெருக்கமாக தருகிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை கதைக்கு இசைந்து இசைத்திருக்கிறது.

நீதிபதி ஜெயப்பிரகாசும், அவர் தொடர்புடைய காட்சிகளும் நன்றாக இருந்தாலும், லாஜிக்காக இல்லை. அதிகாரவர்க்கம், அடிமட்ட வர்க்கத்தை நடத்தும் விதம் பல படங்களில் பார்த்தபடியே இதிலும் படமாகி உள்ளது. சொல்ல வந்ததை கொஞ்சம் சினிமா ரசனையோடு சொல்ல முயற்சித்திருப்பதால் சின்ன சின்ன சறுக்கல்களும் உள்ளது.

என்றாலும் சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகளின் திருட்டில் நிறைந்திருக்கும் அதிகார வர்கத்தின் ஆணவத்தையும், அடித்தட்டு மக்களின் பேரன்பையும் சொன்ன விதத்தில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்காலம் மை லார்ட்.

Leave A Reply

Your email address will not be published.