வைல்டு லைப் போட்டோ கிராபரான சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்) ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு அவர் நாயகி சாருவை (கிரிஷா குரூப்) சந்திக்கிறார். ஊட்டியில் செல்வந்தர் குடும்பத்து பெண்ணாக இருந்தாலும் சித்தியிடம் கொடுமையை அனுபவிக்கும் அவர் சித்தியின் கட்டாய திருமண ஏற்பாட்டில் இருந்து தப்பிக்க சூர்யாவுடன் நெருங்கி பழகி ‘எனக்கு ஒரு காதலன் சென்னையில் இருக்கிறார் அவரை கண்டுடிபிடித்து தாருங்கள்’ என்று ஒரு பொய்யை சொல்கிறார். இதனை உண்மை என்று நம்பும் சூர்யா தானே ஒரு கற்பனையான காதலன் கதாபாத்திரத்தை உருவாக்கி அவன் விரைவில் திரும்பி வருவதாக சாருவை ஏமாற்றி வருகிறார். இப்படியான ஒரு சூழலில் சூர்யா உருவாக்கிய கதாபாத்திரம் நேரில் வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
கொஞ்சம் பழைய பாணியாக இருந்தாலும், காதலையும், பிரிவின் வலியையும் ரசிக்க ரசிக்க சொன்ன விதத்தில் கவனிக்க வைக்கிறார் எழுத்தாளரும், இயக்குனருமான அஜயன் பாலா. படத்தை இளையராஜா இசையால் தாலாட்டுகிறார், செழியன் ஊட்டியின் அழகை மொத்தமாக தந்திருக்கிறார்.
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனுக்கான லட்சணத்துடன் இருக்கிறார். நாயகி கிரிஷா குரூப் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, கொஞ்சம் சுட்டித்தனத்தையும் சேர்த்து நடித்திருக்கிறார். முனீஷ்காந்தும், சிங்கம்புலியும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
ஊட்டியில் ஒரு காதல், உருக வைக்கும் இசை, ரசிக்க வைக்கும் ஒளிப்பதிவு இவற்றை கலந்து தரும் படம் கசக்கவா போகிறது.