பிளாக் மெயில்: சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் கிரைம் திரில்லர்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ள படம். கோவை தொழில் அதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவி பிந்து மாதவி, மகளுடன் ஊட்டி செல்லும்போது எதிரே காரில் வந்த ரமேஷ் திலக் அவர் கார் மீது மோதுகிறார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு நடக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ அவரது குழந்தையை கடத்திச் செல்கிறார்கள்.

நாயகன் ஜி.வி. பிரகாஷ், ஒரு பார்சலைக் கொடுக்கச் சென்று தனது வாகனத்தைத் தொலைத்துவிடுகிறார். அந்த வண்டியில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததால், ஜி.வி. பிரகாஷ் மீது திருட்டுப் பழி சுமத்தப்படுகிறது. அவரது காதலியை அடைத்து வைத்துக் கொண்டு பார்சலை கொண்டு வந்து கொடுத்து விட்டு காதலியை மீட்டுச் செல் என்கிறான் வில்லன். காணாமல் போன குழந்தைக்கும், ஜி.வி. பிரகாஷுக்கும் என்ன தொடர்பு சுற்றி நகர்கிறது கதை.

சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் படத்தை இயக்கியுள்ளார் மு.மாறன். முதல் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. கர்ப்பிணி காதலியை காப்பாற்றப் போராடும் ஜி.வி. பிரகாஷ், குழந்தை வரம் வேண்டி தவிக்கும் ரமேஷ் திலக், குழந்தையைத் தொலைத்த ஸ்ரீகாந்த் என ஆண் கதாபாத்திரங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்புகள் திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது.

குழந்தையைக் கடத்தத் துடிக்கும் பிந்து மாதவியின் முன்னாள் காதலன் லிங்கா, காதலியைக் காப்பாற்றப் போராடும் ஜி.வி. பிரகாஷ், முதலாளியைப் பழிவாங்க நினைக்கும் தொழிலாளி எனப் பல கதைகள் இணைந்து படத்தை விறுவிறுப்பாக்குகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார் தனது நடிப்பால் கடைசி வரை படத்தை தாங்கி பிடிப்பது பெரிய பலம். சமீபத்திய அவரது படங்களை ஒப்பிடும்போது இது அவருக்கு முக்கியமான படமாகிறது.
ஜி.வி. பிரகாஷின் காதலியாக தேஜு அஸ்வினி நல்ல தேர்வு. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் அவர் தனது பங்குக்கு ஸ்கோர் செய்துள்ளார். கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ப்ளாக்மெயில் படத்தில் கடைசி வரை ஏகப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது.

Comments (0)
Add Comment