‘மூன்றாம் கண்’ கதையை கேட்ட உடன் தயாரிக்க முடிவு செய்தேன்: தயாரிப்பாளர் சசிகுமார்

டிரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹோர்ஸ் ஸ்டூடியோ சார்பில கே.சசிகுமார் தயாரிக்கும் படம் மூன்றாவது கண். ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண் படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கி உள்ளார்.

படத்தின் அறிமுக நிகழ்வில் தயாரிப்பாளர் கே.சசிகுமார் பேசியதாவது: ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை கேட்டவுடன் இதை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். குறிப்பாக படப்பிடிப்புக் குழுவினர் நேர்த்தியாகவும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினரான சு.கிதா, சதீஷ், சூர்யா, தினேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பாடலை உருவாக்கிய இசைக் கலைஞர் அஜீஷுக்கும், பாடலின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. படத்தில் ஒரே ஒரு பாடல் இருந்தாலும் அது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பாடலுக்கான பணிகளில் எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல் அனைவரும் உழைத்தனர்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இந்தப் படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார். எப்போதும் இசை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், இந்தப் படத்தின் அனைத்து பணிகளிலும் உறுதுணையாக இருந்த ராமருக்கு எனது சிறப்பு நன்றிகள். அவர் எப்போதும் குழுவுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்றார்.

நடிகர் விதார்த் பேசியதாவது: இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.

இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.

இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
================

Comments (0)
Add Comment