‘கான் சிட்டி’ உருவாக அர்ஜூன்தாஸ், யோகிபாபுதான் காரணம்: இயக்குநர் நெகிழ்ச்சி

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கான் சிட்டி. அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எடிட்டிங்: அரவிந்த் விஸ்நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். வருகிற 26ம் தேதி படம் வெளியாகிறது. இதைமுன்னிட்டு படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது.

இதில் இய’குனர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது: சினிமாவில் நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவது நல்ல மனிதர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான். அந்த வகையில் எனது தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆடியோ உரிமையை பெற்றவர்கள், ஓடிடி உரிமையாளர்கள் என அனைவரும் இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.

என்னுடைய தொழில்நுட்பக் குழுவுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ஃபாக்ஸி, எடிட்டர் அருள் மோசஸ், கலை இயக்குநர் ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடன இயக்குநர் சந்தோஷ் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். வெறும் 55 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க அவர்களின் உழைப்பே காரணம்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரின் கூட்டணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களும் எனக்கு மிகவும் சிறப்பானவை. குறிப்பாக இன்னும் வெளியாகாத பாடல்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நடிகர், நடிகைகள் பற்றி பேச வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச் சரியான முடிவுகளில் ஒன்று என்று சொல்லலாம்.

அன்னா பென் இந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அதேபோல் யோகி பாபு அண்ணா எனக்கு மிகவும் தனிப்பட்ட ஆதரவாக இருந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் படம் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர் அவர்தான். இந்தப் படத்திற்காக அவர் அளித்த ஒத்துழைப்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் சார் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் ‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

இறுதியாக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக என் மனைவிக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே என்னை நம்பி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய கனவுக்காக என்னுடன் இருந்து அனைத்து கஷ்டங்களையும் தாங்கி வந்திருக்கிறார். இன்று இந்த மேடையில் நான் நிற்பதற்கு அவருடைய ஆதரவும் ஒரு முக்கிய காரணம். என்றார்.

Comments (0)
Add Comment