டார்க்: தமிழில் ஹாலிவுட் பேய் படம்

தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே அது காமெடி படங்களாகிவிட்ட நிலையில் முற்றிலும் பயமுறுத்தி மிரட்டுகிற ஹாலிவுட் பாணியிலான படமாக வந்திருக்கிறது ‘டார்க்’.
கே-.பாக்யராஜுக்கு சொந்தமான வீட்டில் 3 இளைஞர்கள் வாடகைக்கு தங்கி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மற்ற இருவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறான். அந்த வீட்டிற்கு திரும்ப யாரும் வாடகைக்கு வருவதில்லை. ஆனாலும் குறைந்த வாடகை என்பதால் செல்கிறார் கதையின் நாயகன் அஜய் கார்த்திக்.
சில நாட்களிலேயே அவரும் தன்னைத்தானே கொல்ல முயற்சிக்கிறார், கே.பாக்யராஜும் இறந்து போகிறார். இது எதனால் நடக்கிறது. இதன் பின்னணி என்ன என்பதை பற்றி கண்டுபிடிக்க வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நடராஜ். இதன் பின்னால் இருக்கும் மர்மங்களை திகிலோடு சொல்லி இருக்கிறார் இயகுனர் மனு ரமேசன்.

துள்ளலான இளைஞராக அறிமுகமாகி பேய்வீட்டுக்குக் குடிபோனதும் பயத்தில் உறைந்து அதிர்ச்சியில் உறைந்து போய் திகிலோடு திரியும் சவாலான வேடமேற்றிருக்கிறார் அறிமுக நாயகன் அஜய்கார்த்திக். ஜாலியாக தொடங்கி படிப்படியாக அச்சத்தில் உறையும் கதாபாத்திரத்துக்கு முழுநியாயம் செய்திருக்கிறார்.இறந்துபோன் அவர் திடுமென எழுந்து நட்டியிடம் பேசும் காட்சி உச்சம். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் ஒரு ரவுண்டு வருவார்.

அஞ்சனா நேத்ரனுக்கு அதிக வேலையில்லை என்றாலும் அவர்தான் கதையின் மைய பாத்திரம். போலீஸ் அதிகாரியாக நட்டி அலட்டி கொள்ளாமல் நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அவரது இழப்பை உணர்த்திவிட்டுப்போகிறார் கே.பாக்யராஜ். சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் ஆகியோரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவும், மனு ரமேசன் இசையும் இணைந்து திகிலூட்டுகிறது.

இயக்குநர் கணேஷ் கே.பாபு கதை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கியிருக்கிறார். திகில் பட ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து.

Comments (0)
Add Comment