‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயனா’. அவருக்கு ஜோடியாக, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஜூலை 17ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் பேசியதாவது: இந்தப் படத்தின் பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.
படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தில் உருவாகியுள்ளது.
சினிமா என்பது ஒரு கூட்டுப் பயணம். ஒரே ஒரு மனிதரால் ஒரு படம் உருவாகாது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. போஸ்டரில் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட அவர் ஒரு மிக இனிமையான மனிதர்.
படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உழைத்ததால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தை அடைந்துள்ளது.‘அன்பே டயானா’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது பெரம்பூர் மக்கள் காலாகாலத்திற்கும் கொண்டாடும் படமாக இருக்கும்.
நாயகி ரம்யா ரங்கநாதன் பேசியதாவது: என்னுடைய திறமையை நம்பி, ‘அன்பே டயானா’ படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு இயக்குநர் கொடுத்தார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பிடிக்கும். இதில் என்னை ஒரு பகுதியாக இணைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
‘அன்பே டயானா’ எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த படம். டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் சொல்லும். ‘அன்பே டயானா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். என்றார்.