இன்றைய இளைஞர்களின் காதல், திருமண வாழ்க்கையை நேர்மையாக பேசும் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’: ராதிகா

இயக்குநர் இளன் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 21ம் தேதி வெளியாகிறது. படத்தின் இசை வெளியீடு, மற்றும் படத்தின் அறிமுக விழா நடந்தது. விழாவில் நடிகை ராதிகா பேசியதாவது: இந்தப் படம் நெட்பிளிக்சில் வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் படம் என் பிறந்தநாளன்று வெளியாகிறது. இது எனக்கு ஒரு நல்ல பிறந்தநாள் பரிசாக அமைந்திருக்கிறது. அதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இது ஒரு வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ளது. அதே நேரத்தில் இதை குடும்பப் படம் என்று சொல்ல முடியாது. இன்றைய சமூகத்தில் ஒவ்வொருவருடைய மனநிலையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையும் எப்படி மாறியிருக்கிறது என்பதையும், அந்த மாற்றத்துக்கு ஏற்ப அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் இப்படம் பேசுகிறது.

குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு காதல், திருமணம், வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. அவர்களுடைய எண்ணங்களை நாங்கள் எப்படி புரிந்துகொள்கிறோம், அதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம், அந்த மாற்றங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் பல விஷயங்களை மிகவும் நேர்மையாகக் கையாண்டிருக்கிறோம். அதனால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. இயக்குநர் இளன் சிறப்பாக இயக்கி நடித்திருக்கிறார். கண்டிப்பாக அனைவருக்கும் படம் பிடிக்கும்.

நடிகை சான்வி மேக்னா பேசியதாவது உண்மையாகச் சொன்னால், ஆரம்பத்திலிருந்தே நான் இளன் அடிக்கடி ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஒரே நேரத்தில் எப்படி ஒரு படத்தை இயக்கவும், அதில் நடிக்கவும் முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், எனக்கு அந்த அனுபவம் கிடையாது.

அதற்கு அவர், ‘நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப முழுமையாக அதற்குள் சென்று நடிப்பேன். அதே நேரத்தில் இயக்குநராக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக வைத்திருப்பேன்’ என்று சொல்வார்.

ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு முக்கியமான உணர்வுப்பூர்வமான காட்சி இருந்தது. அந்தக் காட்சிக்கு முன்பு அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். நான் அவரிடம், ‘ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் நடிகராக என்னுடைய முகத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், அடுத்ததாக என்ன காட்சியைப் படமாக்க வேண்டும் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்றார்.

அதன் பிறகு அவர் ஒருபோதும் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. ஆனால், படம் முழுவதும் அவருடைய செயல்பாட்டைக் கவனித்தபோது, இயக்குநர் நிலையிலிருந்து நடிகர் நிலைக்கும், நடிகர் நிலையிலிருந்து மீண்டும் இயக்குநர் நிலைக்கும் அவரால் மிக எளிதாக மாற முடிந்ததைப் பார்த்தேன்.

அவருக்கு அந்த அளவுக்கு சிறந்த புரிதலும், சமயோகித அறிவும் இருக்கிறது. இந்தப் பயணத்தில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. மேலும், இந்தப் படத்தில் நான் முழுமையாக தமிழில்தான் டப்பிங் பேசியிருக்கிறேன். இந்தப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். கண்டிப்பாக எங்களைப்போல ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள்.

நடிகர், இயக்குநர் இளன் பேசியதாவது..,

இப்படம் எனக்கும் மிகவும் முக்கியமான படம் இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் ரசிக்கும்படியான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். திரை ஆளுமைகள் ராதிகா மேம், செந்தில் சார் எல்லோரும் என்னை நம்பி இப்படத்தில் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்.

முக்கியமாக யுவன் சார் அற்புதமான இசையை தந்துள்ளார். அவர் இசை படத்திற்கு பெரும் பலம். “‘அட்ராசிட்டி’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பாடலை உருவாக்கிய விதமும், அதன் பின்னால் இருக்கும் யோசனையும் மிகவும் வித்தியாசமானது. இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘அட்ராசிட்டி’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் உருவாக்கப் பயணம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன்.

Comments (0)
Add Comment