2017ம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ படத்தை இயக்கி நடித்து ஹிட் கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி மீண்டும் அதே டைட்டிலை கையிலெடுத்து அதன் 2ம் பாகத்தை கொடுத்துள்ளார். ஜென்ஸி இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவரும் விதத்தில் இந்த படத்தையும் எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக சைதன்யா, கெடிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தின் கேரக்டர் சில இதில் வந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட வேறு கதை. கானா இசை குடும்பத்தை சேர்ந்த வாரிசுகள் தொடர்ந்து அவமானங்களால் துரத்தப்பட ஜென்சி தலைமுறையான ஆதி சதிகள், அவமானங்களை முறியடித்து எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. நாதஸ்வரத்திற்கு தில்லானா மோகனாம்பாள் மாதிரி, வயலினுக்கு ராஜபார்வை மாதிரி, இந்த படம் கானா இசைக்கு அங்கீகாரம் அளித்திருக்கும் படம்.
கதை 1970ல் தொடங்குகிறது. ராயபுரத்தில் கானா பாடும் தாஸ் தனது இசையின் மூலம் சாதித்து மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அங்கிருந்து அப்படியே தற்காலத்திற்கு வந்தால் மிகப்பெரிய தனியிசைக் கலைஞனாகும் ஆசையுடன் முயற்சித்து வரும் ஆதி கெடிகா சர்மாவை சந்திக்கிறார். அவர் மீது ஆதிக்கு காதல் ஏற்பட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளருடன் மோதல் உண்டாகிறது. பண, புகழ், பரம்பரை பலம் கொண்ட இசையமைப்பாளருடன் மோதும் அவர் தனது கனவை அடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் திரைக்கதை.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கியிருக்கிறார் ஆதி. இசைக்காக முயற்சிக்கும் இளைஞனிலிருந்து கனவை துரத்தும் இடம் வரை அவரின் தவிப்பு பார்வையாளர்களையும் வந்தடைய மெனக்கெட்டிருக்கிறார். நெபோடிசம் குறித்த விமர்சனங்கள், தன்னம்பிக்கை வசனங்கள் என இரண்டாம் பாதி முழுக்க ஆக்கிரமித்துள்ளது.
இசையில் நடக்கும் ஏற்றத்தாழ்வு பிரச்னைகளும், அதில் கலந்திருக்கும் வாரிசு அரசியலும் கானாவை கலையாக அங்கீகரிப்பதில் ஏற்படுத்தியிருக்கும் விளைவை தன்னளவில் பேசியிருக்கிறார் ஆதி.
பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டடித்த நிலையில் போராடி மேலே வரத்துடிக்கும் இளைஞனின் போராட்டத்தை பேசுகிறது படம். கருணாஸ் மற்றும் பாபா படத்திற்கு உதவி இருக்கிறார்கள். சைத்ரா ஆச்சர், கெத்திகா சர்மாவை விட நடிப்பில் ரம்யா ரங்கநாதன் ஒருபடி மேல் ஸ்கோர் செய்யும் அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் சிறப்பு.
3 காலங்களை காட்ட கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் போட்ட மெனக்கெடல்களும், குஷ்பு -சுந்தர்.சியின் தயாரிப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. மெயின் வில்லன் என யாருமே இல்லாமல், சிஸ்டத்தையும் காலத்தையும் வில்லன் ஆக்கியிருப்பது. சிறப்பு.
“நம்ம புள்ள நல்லா இருக்கணும்னு எந்தவொரு தந்தையும் நினைக்கலாம்.. அதுல தப்பு இல்லை.. நம்ம புள்ள மட்டும் தான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தான் தப்பு”. நெப்போட்டிசத்திற்கு எதிராக பேசுகிறது படம்.
இசையோடு, நல்ல கதையையும் ரசித்து விட்டு வர ஒரு விசிட் அடிக்கலாம் தியேட்டருக்கு.