‘அப்பாகுட்டி’யை பார்த்த பிறகு அப்பாவுக்கு போன் செய்து பேசுவார்கள்: விஜய் ஆண்டனி நம்பிக்கை

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘அப்பா குட்டி’. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மு. மாறன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஊட்டி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு நடந்தது. நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசியதாவது:

இயக்குநர் மு. மாறன் கடந்த 10–15 ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றி, இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார். இதற்கு முன்பு மூன்று படங்களை இயக்கியுள்ள அவர், இந்தப் படத்தின் மூலம் இன்னும் பெரிய அங்கீகாரத்தைப் பெறுவார் என நம்புகிறேன். மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அவருக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான வெற்றியைத் தேடித்தரும்.

ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. காதல் கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட, திருமணமான ஆணைக் காதலிக்கும் உணர்வுகளையும் காதலையும் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது எளிதானதல்ல. அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவோம். அதேபோல், இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து மகிழலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொருவரும் தங்களது அப்பாவுக்கு ஒரு போன் செய்து பேசுவீர்கள். அந்த அளவுக்கு தந்தை–மகள் உறவை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறோம். படத்தில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவைப் போல இங்கே யாரிருக்கா?’ பாடலும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். பாடலாசிரியர் ஏகாதசி, அருண்பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம். நன்றி.

Comments (0)
Add Comment