‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு பஹத் பாசில் – வடிவேலு , இணைந்துள்ள படம் ‘மாரீசன்’ . அந்த படத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள். இந்தப் படத்தில் ஒன்றாக பயணிக்கிறார்கள். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சின்ன சின்ன திருட்டுகள் செய்து ஜாலி வாழ்க்கை வாழ்கிறவர் பஹத் பாதில். ஒரு வழக்கிற்காக சிறை சென்று திரும்புகிறவர், ஞாபகமறதி பிரச்னை கொண்ட வடிவேலுவை ஒரு வீட்டில் திருடப்போனபோது சந்திக்கிறார்.
அதன்பின் வடிவேலு வங்கி கணக்கில் 25 லட்சம் இருப்பதை அறியும் பஹத் அந்த பணத்தை திருட முயற்சிக்கிறார் இதற்காக வடிவேலுவுடன் பாளைங்கோட்டை தொடங்கி திருவண்ணாமலை சென்று கோவை வரை பயணிக்கிறார். எதற்காக அந்த ஊர்களுக்கு சென்றனர்? எதற்காக சென்றனர்? பஹத்தின் திட்டம் நிறைவேறியதா? வடிவேலு தன்னுடைய பணத்தை காப்பாற்றிக்கொண்டாரா? என்பதுதான் படத்தின் கதை.
பைக்கில் நீண்டதூர பயணம், இருவருக்குமான உரையாடல் என முதல்பாதி ஒரு கவிதை மாதிரி ஜாலியாக நகர்கிறது படம். வடிவேலு சீரியசாக நடித்தாலும் ஆங்காங்கே புன்முறுவலும் பூக்க வைக்கிறார். இரண்டாம் பகுதியில் கதை அப்படியே ஒரு கிரைம் திரில்லராகிறது. அதிலும் வடிவேலும், பஹத் பாசிலும் போட்டிபோட்டு நடிக்கிறார்கள்.
பஹத் வழக்கம்போல் தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். ஒரு திருடனாகவும், வடிவேலுவை ஏமாற்ற நினைக்கும் காட்சிகளிலும், அவர் மீது கோபம் கொள்ளும் இடங்களிலும், பின்னர் அவர்மீது அனுதாபம் கொள்கிற இடத்திலும் தனது நடிப்பு முத்திரைகளை பதிக்கிறார்.
விவேக் பிரசன்னா, கோவை சரளா, சித்தாரா, பி.எல்.தேனப்பன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒரு சமூகப்பார்வையுடனான கதையை எடுத்துக்கொண்டு, எந்த சமரசமும் இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதிஸ் சங்கர்.
================