திருக்குறள் படித்தால் தலைவராகலாம்: ‘வள்ளுவன்’ பட விழாவில் கோமல் சர்மா பேச்சு

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கோமல் சர்மா பேசியதாவது:

2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல, அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது.

தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ, கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் கோமல் சர்மா அடிப்படையில் ஒரு ராஜஸ்தானி. ஸ்குவாஷ் வீராங்கனையான இவர் ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ, அனு, வைகை எக்ஸ்பிரஸ், மரக்காயர் அரபிக் கடலின்ட சிம்ஹம், கோட், பராஸ் 3டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment