தமிழ் நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் தமிழ் நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி ஒரே நாளில் 4 ஆயிரம் கலைஞர்களை கொண்ட பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தயான்பன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு அரசின் ஒரு அங்கம். நலித்த கலைஞர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவது, அவர்களுக்கான வருமானத்தை ஏற்படுத்தி தருவது, குடும்ப பாதுகாப்பு போன்றவை இதன் குறிக்கோள் ஆகும். இதோடு திறமையான கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ‘கலைமாமணி’ விருதும் வழங்கி வருகிறது.
அதன்படி 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான விருது விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
மன்றம் ஆண்டு தோறும் பொங்கல் கொண்டாட்டாக வருகிற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களில் உள்ள பொது இடங்களில் பொங்கல் கொண்டாட்ட கலை நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் 4 ஆயிரம் கலைஞர்கள் வரை கலந்து கொள்கிறார்கள். இதுதவிர வருகிற 22 மற்றும் 25, 26ம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் இசை சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.
நலிந்த கலைஞர்களுக்கான மாதந்திர நிதி உதவி 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு நிதி உதவி பெற காத்திருக்கும் 2500 கலைஞர்களுக்கும் நிதி உதவி வழங்க உத்தரவிட்டதோடு அதற்கு 9 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இயல் இசை நாடக மன்றத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிதி 3 கோடி நிதி, 4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கலைமாமணி விருது பெற்று வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், அனைத்து கலைமாமணிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.