தயாரிப்பாளர் அம்பேத்குமார் இல்லையென்றால் ‘மை லார்ட் இல்லை : ராஜுமுருகன் நெகிழ்ச்சி

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் ‘மை லார்ட்’ ராஜுமுருகன் இயக்கி உள்ளார். சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். வருகிற 13ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது இதில், சசிகுமார் பேசியதாவது: இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் ஒரு பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கடைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது.

‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம். இந்த கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி

இந்த படம் ஒரு கூட்டுப் பயணம். நடிகர்கள், இசையமைப்பாளர், பாடகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் தங்களது முழு உழைப்பையும் நேர்மையையும் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜுமுருகனை சைக்கோ என்றார்கள் நானே பயந்தேன் அவருடன் வேலைபார்த்த போது அவர் அப்படி இல்லை. படம் முடித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர் சினிமா மீதுதான் சைக்கோவாக இருக்கிறார். அவர் நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும். நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் ராஜுமுருகன் பேசியதாவது: ‘ராஜுமுருகன்’ என்ற மனிதன் மீது ‘அம்பேத்குமார்’ என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட் உருவானது, அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்த படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து ‘வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார், ஒரு நாள்கூட உட்காரக் கூடாது’ என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்கு கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்.

இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஷான் ரோல்டனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு வெறும் இசை மட்டுமல்ல. அது இலக்கியம், அரசியல், சமூகம் என்று பல அடுக்குகளைக் கொண்ட ஆத்மார்த்தமான உறவு. அந்த எல்லாமே சேர்ந்து தான் அவரது இசையாக வெளிப்படுகிறது. இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.

சசிக்குமார் அண்ணன் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை, அவர் முழுப்படத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அன்பையும் நம்பிக்கையையும் பேச பணம் தேவைப்படுகிறது எப்படியாவது இப்படத்தில் பணத்தை சம்பாதித்து என் தயாரிப்பாளருக்கு தந்து விட வேண்டும் என்பது என் ஆசை. என்றார்.

Comments (0)
Add Comment