அனாமி: பாவனாவின் மிரட்டல்

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தற்போது தமிழில் வந்திருக்கிறது. இதில் நாயகியாக நடித்துள்ள பாவனா இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.
இந்த கதையில் பாவனா ஒரு தடயவியல் நிபுணர். பல கொலைகளை கண்டுபிடிக்கும் அவருக்கு தன் தம்பியின் கொலை பற்றியும் கண்டுபிடிக்க வேண்டிய நிலை வருகிறது. பாவனாவின் பெற்றோர் விபத்தில் இறந்ததிலிருந்து சற்றே மனநிலை பாதிக்கப்பட்டராய் இருக்கிறார்தம்பி. அடிக்கடி தற்கொலை முயற்சியும் செய்கிறார்.

அந்த தம்பி ஒரு நாள் காணாமல் போகிறார். பல நாட்களுக்கு பிறகு பிணமாக கிடைக்கிறார். அது தற்கொலை என்று பைலை மூடிவிடுகிறார் விசாரணை அதிகாரி ரகுமான். ஆனால் இதே போன்று பல கொலைகள் ஒரே மாதிரி நடக்க விழித்துக் கொள்கிறது போலீஸ். இதுவரை தற்கொலை என்று மூடப்பட்ட கேஸ்கள் தூசி தட்டி எடுக்கப்படுகிறது. இந்த தொடர் கொலைகளை செய்வது யார்? பாவனாவின் தம்பியை கொன்றது யார் என்பதுதான் படத்தின் கதை.

போலீசுக்கு நிகரான உழைப்பு தடயவியல் துறைக்கும் உள்ளது என்பதை பாவனாக கேரக்டர் மூலம் பேசியிருக்கிறது படம். ஒரு கொலை களத்தையும் போலீஸ் துப்பறியும் விதத்தையும் தடயவியல் நடைபெறும் சூழ்நிலைகளையும் அழுத்தமாக பதிவு செய்கிறது படம். தொடர் கொலைகள் நடக்கும் கதையை நேரடியாகவே நாம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறார் இயக்குநர் ரியாஸ் மரத்.

சோகமும், கோபமும் இணைந்த முகம், தம்பி மீது மாறா பாசம், துப்பறியும் துணிச்சல் என பாவனா தனது கேரக்டரை தோழ்களில் சுமந்துள்ளார். போலீஸ் மோப்பம் பிடித்து ஒரு இடத்துக்கு செல்லுமுன்னரே இவர் சென்று விடுவது மிரட்டல் ரகம். ரகுமான் நடித்துள்ள கேரக்டர் அவருக்கு புதிதில்லை என்றாலும் புதிய கேரக்டர் போன்றே உணர்வோடு நடித்திருக்கிறார், ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது என்றால் பின்னணி இசையும் பாடல்களும் அவற்றைத் தாங்கி நிறுத்துகின்றன.

கொலையாளி ஒரு சைக்கோ கில்லராக இல்லாமல் கொலைகளுக்காக சொல்லும் காரணம் ரொம்பவே புதியது. அரசியலுக்காக, சாதி வெறிக்காக நடக்கும் கொலைகளை விட நாங்கள் செய்தது பெரிய குற்றமில்லை என்று கொலையாளி வாதிடும் இடம் நிறைய யோசிக்க வைக்கிறது.
அனாமி படமல்ல, எதிர்கால சந்ததிக்கு ஒரு பாடம்

Comments (0)
Add Comment