சில படங்களை இந்த படம் ஹாலிவுட் தரத்தில இருக்கிறது என்பார்கள். ஆனால் இந்தப் படம் அசல் ஹாலிவுட் படம். ஆனால் கதை நம்மூர் கதை. சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு தேடும் படலத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டின் ஓர் அறையை வாடகைக்கு விடவுள்ளதாகச் சொல்கிறார் . குறைந்த வாடகை என்பதாலும், அழைப்பது பெண் என்பதாலும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, சிந்து இருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வசதியான வீட்டில் குடியேறுகிறார் மகி.
சில நாட்களிலேயே சிந்து மீது மகிக்குக் காதலும் வருகிறது. ஆனால் சிந்து பெண்ணுமல்ல, மனிதகுலத்தவளும் அல்ல என்கிற டுவிஸ்டியிலிருந்து பரபரக்க தொடங்குகிறது படம். ஹாரர் இல்லாத த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.
அப்பாவித்தனம், ரொமான்ஸ், ஆற்றாமை, பயம் என ஜி.வி. பிரகாஷ் பன்முகம் காட்டியிருக்கிறார். மர்மத்தையும், காதலையும், அப்பாவித்தனத்தையும் கலந்து கட்டிய முகபாவனையில் படம் முழுவதும் வரும் கயாடு லோஹர், காமெடிக்கு மாறனும், ‘ஆதித்யா’ கதிரும் காமெடி செய்திருக்கிறார்கள்.
பதற்றமான காட்சிகளை மேலும் பரபரப்பாக்குகிறது அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை பரபரப்பைக் கொளுத்திப் போடுகின்றன.
சுவாரஸ்யமான திரைக்கதை லேயர்கள், எதிர்பாராத ட்விஸ்ட்கள், சுவாரஸ்யமான காட்சிகள் என பரபரப்பை கொடுத்து இரண்டரை மணி நேரம் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது படம்.