மண்டாடி: ஹாட்ரிக் அடித்த சூரி

காமெடி நடிகராக இருந்து ஹீரோவான சூரி ‘மண்டாடி’ படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்து தனது பயணத்தை தொடர்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்த்திராத பாரம்பரியப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியிறது ‘மண்டாடி’ .

ராமநாதபுரத்தின் கடலோர கிராமமான முகவைப்பட்டினத்தில் புகழ்பெற்றது பாரம்பரியமிக்க பாய்மர படகு போட்டி. அந்த ஊரில் ஒரே குருவிடம்(சத்யராஜ்) பயிற்சி பெற்ற முத்துக்காளியும் (சூரி) சாட்டப்புலியும்(சுஹாஸ்) எதிரெதிர் களத்தில் நிற்கிறார்கள். குருவை கொன்று இந்த போட்டியை வியாபாரமாக்குகிறார் சாட்டப்புலி. அதை எதிர்த்து நிற்கிறார் சூரி.

அவரை தவறாக புரிந்து கொள்ளும் காதலி மகிமா நம்பியார் அவரை அவமானப்படுத்தி துரத்த சென்னை வந்து விடுகிறார் சூரி. 20 வருடங்களுக்கு பிறகு உயிர் பயத்தோடு சூரியை காண வருகிறார் மகிமாவின் மகன் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார் சூரி. வந்த இடத்தில் சாட்டப்புலி பெரிய வில்லனாக வளர்ந்து நிற்கிறான். அவரை அதே பாய்மர படகு போட்டி மூலம் சூரி எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் பல ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் வந்திருந்தாலும், இதுவரை திரையில் அதிகம் காட்டப்படாத ஒரு புதிய விளையாட்டு உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் முயற்சியிலேயே ‘மண்டாடி’ வெற்றி பெற்று விடுகிறது. அந்த அளவுக்கு படகுப் போட்டி தொடர்பான காட்சிகளை மிக நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.

ராமநாதபுரத்தின் கிராமப்புற பின்னணி, கடல், படகுகள், மீனவர்கள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார், படகுப் போட்டியின் விதிகள், வியூகங்கள் ஆகியவை மக்களுக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதனால் பார்வையாளர்கள் மிக விரைவாக விளையாட்டோடு ஒன்றிப்போகிறார்கள்.

கதையின் நாயகனாகச் சூரி தனது கேரக்டரை துல்லியமாகப் புரிந்து கொண்டு நடித்துள்ளார். முத்துக்காளி கதாபாத்திரத்துக்கு தேவையான உடல் உழைப்பை வழங்கியுள்ளார். தெலுங்கு நடிகரான சுஹாஸ், வில்லத்தனத்தை நடிப்பில் கொண்டு வந்து சாட்டப்புலி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.

ஏஞ்சல் ராக்கம்மாவாக வரும் மஹிமா நம்பியாருக்கு வலுவான கதாபாத்திரம். தனது நடிப்பால் மனதைக் கவர்கிறார். சத்யராஜ், மாரியாக வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். கடலில் நடக்கும் படகுப் போட்டிகளையும், அதன் விறுவிறுப்பையும் அட்டகாச காட்சி அனுபவமாக மாற்றியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி மிரட்டல், ‘உயிரே நீதான் புள்ள’ பாடல் உருக வைக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதையாலும், நடிகர்களின் நல்ல நடிப்பாலும் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான திரையனுபவத்தை தருகிறது.

Comments (0)
Add Comment