டிரோன்ஸ்: பேண்டசி காமெடி

நாயகன் கிஷோர் (டிராவிட் செல்வம்), நாயகி கருப்பட்டி (அஞ்சலி நாயர்), தஷ் (தீபக்) ஆகிய மூன்று நண்பர்களும் ‘பிளாக் ஹோல்’ என்ற வித்தியாசமான அறிவியல் ஆய்வுக்கூடத்தில் தங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அங்கிருந்து வெளியேற முடியாததால் ட்ரோன் உதவியுடன் வெளி உலகத்தை வேடிக்கை பார்க்கின்றனர். அப்போது கிஷோரின் கண்களில் படுகிறார் ஏஞ்சல் பக்ருதி (சித்தி இத்னானி). பார்த்தவுடனேயே அவர் மீது காதலில் விழுகிறார் கிஷோர்.

ஆனால் இவர்களது காதலுக்கு மிகப்பெரிய தடையாக நிற்கிறார் பக்ருதியின் பாட்டியான சூனியக்காரக் கிழவி (தேவதர்ஷினி). காதலை ஏற்க மறுக்கும் அவர், கிஷோரையும் அவரது நண்பர்களையும் தனது மந்திர சக்தியால் மாயக் கோட்டைக்குள் சிறை வைக்கிறார். மந்திரக் கோட்டையில் சிக்கிய நண்பர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? கிஷோரின் காதல் கைகூடியதா?, சித்தி இத்னானி யார்? அவருக்கும் தேவதர்ஷினிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது மீதிக்கதை.

குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே நேரத்தில் கவரும் ஃபேண்டஸி திரைப்படங்கள் வரிசையில் வெளியாகி உள்ளது இந்த படம். சூனியக்காரி, தேவதை, மர்மக் கொலைகள், அறிவியல் ஆய்வுக்கூடம் என முற்றிலும் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. காதல் காலத்தை கடந்து நிற்கும் அது நிறம் பார்ப்பதில்லை என்ற மெசேஜையும் சொல்கிறது.
மாயாஜாலக் காட்சிகள், நகைச்சுவைச் சம்பவங்கள், மர்மமான நிகழ்வுகள் என அடுத்தடுத்து வரும் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. கிளைமாக்ஸ் திருப்பம் யாரும் எதிர்பாரத சுவாரஸ்யம் மற்றும் செண்டிமென்ட் டச்.

பரிதாபங்கள் நிகழ்ச்சிகள் மூலம் கவனம் பெற்ற டிராவிட் செல்வம், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நடிப்பு, நடனம், நகைச்சுவை என கதாநாயகனாக கவனம் ஈர்க்கிறார். தேவதர்ஷினி, தனது அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அழ வைத்து விடுகிறார். சித்தி இத்னானி அழகே தேவதை பாத்திரத்தை கண் முன் நிறுத்தி விடுகிறது.

சைக்கோ கொலையாளியைக் கண்டுபிடிக்க முயலும் காவல் ஆய்வாளராக சதீஷ் நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஆர்.ஜே. தீபக், குரோஷி தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஜி.எம். மோர்கன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே நேரத்தில் கலகலக்க வைத்திருக்கிறார்.

Comments (0)
Add Comment