ராமாயணா: ஆஸ்கரை நோக்கிய பயணம்

மிகப் பெரிய பொருட்செலவில், ஹாலிவுட் கிராபிக்ஸ் வல்லுநர்களின் பங்களிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கிறது ‘ராமாயணா: பாகம் 1’

ராமாயண கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான், நாடகங்கள், சீரியல், திரைப்படம், கார்ட்டூன் என பல வகைகளில் பார்த்திருந்தாலும், அதை மீண்டும் ஒருமுறை பிரம்மாண்டமாக டிஸ்னி, மார்வெல் படங்களில் மட்டுமே பார்த்து வியந்த தத்ரூப கிராபிக்ஸ் வழியே தந்து வெற்றி பெற்றிருக்கிறார் நிதேஷ் திவாரி.
உலகைக் காக்க விஷ்ணுவின் அவதாரமாக ராமன், பூமியில் பிறப்பது முதல், ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க ராமன் போருக்குத் தயாராகும் தருணம் வரை இந்த முதல் பாகத்தில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

பறக்கும் யானைகள், பாயும் காண்டாமிருகங்கள், சிறுத்தைகள் பூட்டிய தேர்கள் மற்றும் உருமாறும் அரக்கர்கள், பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஜடாயூ கழுகு என தொழில்நுட்பத்தின் அனைத்து மாயாஜாலங்களும் திரையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

ராமனாக ரன்பீர் கபூர், அறத்தின் பக்கம் நிற்கும்போதும், வேறு வழியின்றி அழிவுக்கான போரைத் தொடங்கும்போதும் கம்பீரமாக மனதில் பதிகிறார். சீதையாக சாய் பல்லவி, நடிப்பில் அதற்கான நியாயம் சேர்க்கிறார். ராமனுடனே பயணிக்கும் லக்ஷ்மணன் (ரபிதுபே) கதாபாத்திரத்தின் மூலமாக காமெடிக்கும் தோரணம் கட்டியது புத்திசாலித்தனமான முடிவு.

ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி இந்த முதல் பாகத்தில் நம்மை ஈர்ப்பது ராவணனாக அட்டகாசம் செய்யும் யஷ். மிரட்டலான உடல்வாகு, ஆயிரம் பேரைக் களத்தில் சந்திக்கும் தைரியம், தவறு செய்தவர்களைச் சமரசம் காட்டாமல் தண்டிக்கும் குணம் என ராவணனாகவே மாறி இருக்கிறார். தசரதராக அருண் கோவில், கைகேயியாக லாரா தத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங், அவரின் கணவர் வித்யுத்ஜீவனாக விவேக் ஓபராய், விபிஷணனாக ஹரிஷ் உத்தமன் என ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

இது கிராபிக்ஸ் எனப் பிரிக்க முடியாத அளவுக்கு வனத்தின் காட்சிகளைப் பிரமாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறது பங்கஜ் குமார் – மகேஷ் லிமாயே கூட்டணியின் ஒளிப்பதிவு. வனவாசம் கிளம்பும் காட்சியை அத்தனை ஆழமான உணர்ச்சிகளின் குவியலாக மாற்றியிருக்கிறது ஏ.ஆர்.ரஹ்மான் – ஹேன்ஸ் ஜிம்மர் கூட்டணியின் பின்னணி இசை.
மொத்தத்தில் ஆஸ்கரை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் ராமர்.

Comments (0)
Add Comment