ஐகான் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்எல்பி தயாரித்துள்ள படம் ‘மையல்’. பிரபுசாலமன் உதவியாளர் ஏபிஜே.ஏழுமலை இயக்கி உள்ளார். மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சேது பல வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ரிதி நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் சவுந்தர்யன் மகன் அமர் இசை அமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது “தேனப்பன் இதில் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ்தான் படத்தின் பலமே. சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். அமருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். கிராமத்து படம் எனும்போது லைவ்வாக இசை அமைய வேண்டும். அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார்.
இசை அமைப்பாளர் சவுந்தர்யனை சேரன் பாண்டியன் படத்தின் மூலம் நான்தான் அறிமுகப்படுத்தினேன். திறமையான மனிதர், ஏனோ அவர் உரிய இடத்தை பெறவில்லை. ஆனால் இன்றைக்கு அவரது மகன் இசை அமைப்பாளராக வந்திருக்கிறான். சவுதர்யனுக்கு இனி கஷ்டம் இல்லை. தான் சாதிக்க முடியாததை மகனை வைத்து சாதிப்பார். மகன் இனி தந்தையை பார்த்துக் கொள்வார். என்றார்.
இயக்குநர் ஏழுமலை பேசும்போது “இந்த ‘மையல்’ உருவாக காரணம் சேதுதான். எல்லாப் புகழும் என் கதாநாயகன் சேதுவுக்குதான். சவுந்தர்யன் சாருடைய மகன் அமர் இந்தப் படத்தில் அழகாக இசையமைத்திருக்கிறார். படத்திற்காக அயராது உழைத்திருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”. என்றார்.