முந்தைய பாகம் ‘நோ வே ஹோம்’ வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’. ‘நோ வே ஹோம்’ படத்தின் இறுதியில், உலகை காக்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் செய்யும் ஒரு மந்திரத்தால், உலகம் முழுமைக்கும் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) யார் என்பதே மறந்துபோகிறது. தன் காதலி எம்.ஜே (ஸெண்டாயா) மற்றும் உயிர் நண்பன் நெட் (ஜேக்கப் படலோன்) ஆகியோரின் உயிரைப் பாதுகாக்க, தனது அடையாளத்தை தியாகம் செய்த பீட்டர் பார்க்கர், தற்போது நியூயார்க் நகரின் சிறிய வாடகை வீட்டில் முற்றிலும் தனிமையில் வாழ்கிறார். தன் தனிமையையும்
துயரத்தையும் மறக்க ஸ்பைடர்மேனாக ஓய்வில்லாமல் உழைக்கிறார்.
இந்தச் சூழலில், நியூயார்க் நகரில் திடீரென ஏற்படும் ஒருவிதமான அமானுஷ்ய மாற்றங்கள் பொது மக்களை வன்முறையாளர்களாக மாற்றுகின்றன. ‘டேமேஜ் கன்ட்ரோல்’ என்ற அமைப்பின் தலைமையகத்தில் மறைக்கப்பட்டுள்ள ஏதோ ஒன்றை வேட்டையாடத் துடிக்கும் அந்தப் புலப்படாத சக்தியைத் தடுக்கப் புறப்படும் பீட்டர், அதை செய்து முடித்தாரா என்பதுதான் மையக் கதை.
குழந்தைகளில் தொடங்கி 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் வரை அத்தனை தலைமுறையினரையும் தனது அசாத்திய சாகசங்களால் கட்டிப்போடுகிறார் ஸ்பைடர் மேன். முந்தைய படங்களை காட்டிலும் ஆக்ஷன் காட்சியில் அனல் பறக்கிறது. என்றாலும் பீட்டர் பார்கரின் தனிமனித உணர்வுகளும், காதலும் இன்னொரு பக்கம் ரசிகனை நெகிழ வைக்கிறது. ஹல்க் ஸ்வீட் சர்ப்ரைஸ் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ புகழ் சேடி சிங் படத்திற்கு மற்றுமொரு பலம்.
சாகசத்தோடு காதலின் வலி, பிரிவின் ஏக்கம் ஆகியவற்றை நுணுக்கமாக பேசிய வகையில் சூப்பர் ஹீரோ பட வரிசையில் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ தனித்து தெரிகிறது.