தி டார்க் ஹெவன்: மாஸ் எண்டர்டெயின்மெண்ட் ட்ரீட்

எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு மர்மமான புத்தகம், ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் ஒருமுறை துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைச் சந்திக்கும் ஒரு கிராமம், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தொடர் கொலையாளி. இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பில்லாதவை போலத் தோன்றினாலும், அவற்றை ஒருங்கிணைப்பதுதான் படத்தின் திரைக்கதை. மர்மத்தை தக்கவைத்துக்கொண்டு, ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாக இயக்குனர் பாலாஜி இதை உருவாக்கியுள்ளார்.

1970களில் தொடங்கும் கதை. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் குறித்து ஆய்வு செய்த ஒரு பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் எழுதிய ‘தி டார்க் ஹெவன்’ என்ற புத்தகத்தைக் கண்டெடுக்கும் ஒரு நூலகரை அறிமுகப்படுத்துகிறது. அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, இன்னும் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய விவரங்களை அவர் அறிந்துகொள்கிறார். வரவிருக்கும் ஆபத்துகள் குறித்து மக்களை எச்சரிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், இறுதியில் புத்தகத்தில் கணிக்கப்பட்டபடியே அவரையே ஒரு பலியாடாக மாற்றுகின்றன.

நேரடி கதை என்று பார்த்தால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மேக்கரை கிராமத்தில் வாழ்ந்த வனமங்கையை தசரதன் என்பவர் காதலித்தார். ஆனால், தனது காதலியின் கற்பு மீது சந்தேகப்பட்டு எரித்துவிடுகிறார். அப்போது வனமங்கை விடுத்த சாபம், இப்போது ஒவ்வொரு ஜூன் மாதமும் தொடர்ச்சியாக கொலைகள் நடக்கிறது. அந்த கொலையாளி யார்? அவன் சிக்கினானா என்பது கதை புத்தகம், சாபம் மற்றும் கொலைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் எவ்வாறு இணைகின்றன என்பதையும் மீதமுள்ள படம் விவரிக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம், படம் முழுவதும் இயக்குனர் பாலாஜி தக்கவைத்துள்ள விறுவிறுப்பான மற்றும் மர்மமான சூழல்தான். பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லையென்றாலும், கிளைமாக்ஸ் வரை படத்தின் சுவாரஸ்யத்தைத் தக்கவைப்பதில் படம் வெற்றி பெற்றுள்ளது. நிழல்கள் ரவி மற்றும் வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்கள் சிறிய வேடங்களில் தோன்றினாலும், படத்தின் கதைக்களத்திற்குள் இயல்பாகப் பொருந்திப் போகிறார்கள். கொலைகளை விசாரிக்கும் காவல் அதிகாரியாக நடிக்கும் சித்து, சவாலான அந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். ரித்விகாவுக்கு அவரது முந்தைய கதாபாத்திரங்களிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு முக்கியமான வேடம். அதேபோல், சித்துவின் ஜோடியாக நடிக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் தர்ஷிகாவும் குறிப்பிடத்தக்கதொரு பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மொத்தத்தில், ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக அமைந்துள்ளது. பார்வையாளர்களைப் பயமுறுத்துவதோடு, படத்தின் மர்மம் குறித்த ஆர்வத்தையும் இறுதிவரை தக்கவைத்துக்கொள்கிறது. கொடுக்கும் காசுக்கு வஞ்சனை இல்லாமல் விருந்து வைக்கிறது படம்.

Comments (0)
Add Comment