என்ன விலை: துணிச்சலான கேள்வியும், சொல்ல முடியாத பதிலும்

மலையாள திரைப்பட எழுத்தாளர் சஞ்சீவ் பழுர் தனது முதல் படத்தை தமிழில் இயக்கி இருக்கிறார். கொஞ்சம் மலையாள வாசனை அடித்தாலும் இது எல்லாவருக்குமான ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருக்கும் படம்.

ராமேஸ்வரத்தில் வாழும் நேர்மையான ஏழை கருணாஸ். மனைவி விஜயலட்சுமி, தங்கை ஷாஷா, மகன் கமலேஷ் ஜெகன் என ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கடலில் தூக்கி வீசும் நாணயங்களை முழ்கி எடுப்பதுதான் அவரது தொழில். ஒரு நாள் அப்படி எடுக்கும்போது அவருக்கு நவரத்தினங்கள் பொறித்த ஒரு பதக்கம் கிடைக்கிறது. இது அபூர்வமான பொருள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கருதும் கருணாஸ் அதனை உள்ளூர் போலீஸ் மோகன் ராமனிடம் ஒப்படைக்கிறார். ஆனால் அவரோ கோடி கணக்கில் மதிப்புள்ள அதை மொத்தமாக ஆட்டைய போட நினைக்கிறார். அவர் திட்டம் சொதப்பிவிட கருணாசுக்கு திருட்டு பட்டம் கட்டி சிறையில் அடைக்கிறார்.

இந்த நேரத்தில் அவருக்கு சட்ட உதவி வழங்க வருகிறார் வழக்கறிஞர் நிமிஷா சஜயன். அந்த பதக்கம் என்ன? அது யாருடையது? அதன் விலை என்ன? அது அரசாங்கத்திற்குரியதா? அதை எடுத்த கருணாசுக்கு உரியதா? அது புதையலா?, தொல்பொருளா? என பல கேள்விகளை எழுப்புகிறது படம்.

இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய கதையை சொல்லி இந்த சிஸ்டத்தின் மீது வலுவான கேள்விளை முன்வைத்திருக்கிறார் இயக்குனர் சஞ்சீப் பழூர். இயல்பான மனிதர்கள், எளிமையான காட்சிகள் என மலையாள சினிமா பாணியை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

கருணாசுக்கு இதுபோன்ற கதாபாத்திரம் புதிதல்ல. ஈசியாக ஊதிவிட்டு போயிருக்கிறார். இருந்தாலும் அவமானத்தால் கூனிகுறுகும் இடத்தில் நெகிழ வைக்கிறார். நிமிஷா சஜயன் நடிப்பு அரக்கி. அவருக்கேற்ற தீனி இதில் அமையாவிட்டாலும் கோர்ட்டில் சிங்கப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறார். விஜயலட்சுமி ஒரு மீனவ குடும்பத்து மனைவியை கண்முன் கொண்டு வருகிறார். ஷாஷா தங்கையாக இயல்பாக நடித்திருக்கிறார். மோகன் ராமன் முதன் முறையாக கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ்சின் பின்னணி இசை ஒலிக்க வேண்டிய நேரத்தில் ஒலித்து மவுனிக்க வேண்டிய நேரத்தில் மவுனித்திருக்கிறது.

மொத்தத்தில் புதிய கோணத்தில் புதிய கேள்வியை எழுப்பியிருக்கு-ம் இந்த படம் தியேட்டரில் கொடுக்கும் டிக்கெட் விலைக்கு நியாயம் சேர்க்கிறது.

Comments (0)
Add Comment