தி டார்க் ஹெவன்: கடின உழைப்பில் உருவான படம்

கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்’. நாட்டார் கதையை மையமாக வைத்து முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.

பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார்.

வருகிற 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் கதை நாயகன் சித்து பேசியதாவது: நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும். எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும். அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது.

ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள். அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது .

படக்குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. என்றார்.

Comments (0)
Add Comment