யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சிங்காரம். இதனை
ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ளனர். கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.வரும் அக்டோபர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஆர்.வி. உதயகுமார் கலந்துகொண்டார். விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்க அனுபவங்களையும், அதன் பின்னணியையும் பகிர்ந்துகொண்டனர்.
நடிகர் யோகி பாபு பேசுகையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, ரமண பாலாஜி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானவை என்று தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.