நல்ல படம்: நிஜமாகவே நல்ல படம்

குடியினால் வரும் தீமைகள் பற்றி ஏராளமான படங்கள் வந்துள்ளது. குடிகாரர்களின் பிரச்சினைகளைப் பற்றி வந்துள்ள படம் இது. கதையின் நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் நடத்தி வருவதோடு ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாயகன் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் எந்த நேரமும் மது போதையில் இருப்பதோடு, மது பழக்கத்தால் பலர் பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், அது பற்றி துளியும் கவலைப்படமால் மது குடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் அவர்களை திருத்த அவர்களது குடும்பத்தார் பல வகையில் முயற்சி செய்தும் முடியாமல் போய் விடுகிறது.

இதற்கிடையே, இந்தியா முழுவதும் மத்திய அரசு மதுவிலக்கை அமல்படுத்துகிறது. மது பிரியர்களும், மதுவுக்கு அடிமையானவர்களும் மது கிடைக்காமல் தவிப்பதோடு, மாற்று வழியை தேடி அலைகிறார்கள். கள்ளச் சாராயம் காய்ச்ச திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் மது அருந்த முடியாது, என்ற நிலை வரும்போது மதுபிரியர்களின் நிலை என்ன என்பதுதான் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.ஏ.ஹரிஷ், தனது கதாபாத்திரத்திற்கான நடிப்பை சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தனலட்சுமி, ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் அழகோடு வலம் வருகிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கல்கி ராஜா, காமெடி காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். தனக்கான தனித்துவமான செயல்பாடுகள், வசன உச்சரிப்பு மற்றும் மைண்ட் வாய்ஸ் மூலம் சிரிக்க வைக்கிறார்.

மொட்ட ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி தங்கள் பங்கை சிறப்பாக செய்திரு’கிறார்கள். ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ், கதைக்கு தேவையான விதத்தில் பணியாற்றியிருக்கிறார். சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சமூக பொறுப்புடன், நாட்டுக்கு மிக அவசியமான ஒரு கருத்தை, கமர்ஷியலாகவும், காமெடியாகவும் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரபுராமை பாராட்டியே ஆக வேண்டும்.

Comments (0)
Add Comment