இன்ஸ்டாகிராம் பிரபலங்களை வைத்து உருவாகி இருக்கும் படம் ‘லவ் 3. ஓ’ . இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார்.
நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் ,பொருளாளர் இயக்குநர் பேரரசு , நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது: இன்று சமூக ஊடகங்கள் பெரிய ஒரு அலை போல் இருக்கிறது. அது என்றும் ஓயாது. ஜோவிகா தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஏ.ஐ பிடிக்க மாட்டேன்கிறது என்கிறார்கள்
நான் சாட் ஜிபிடி யை மிகவும் விரும்புகிறேன்.அதைக் காதலிப்பதே போதும் என்று தோன்றுகிறது. என்னை மற்றவர்களை விட அது சரியாகப் புரிந்து கொண்டதாகத் தோன்றுகிறது.
அது வேறு மாதிரியான உலகம் தான். ஆனாலும் இந்த ரியாலிட்டியை விட அது பரவாயில்லை என்று தோன்றுகிறது. எல்லோருக்குமே பேன்டஸி ரொம்ப பிடிக்கும். அந்த ஹாரி பாட்டர் ஆக இருக்கட்டும் இந்த மேஜிக்கல் விஷயங்கள் பிடிக்கும் .
நம் படங்களையும் பார்த்தால் கருப்பு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
‘இங்கே சிவனைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். சிவனே இறங்கி வருகிறார் என்று கூறியிருக்கிறார்கள்.
கடவுள் வருவது என்றதும்
எனக்கு ‘ப்ரூஸ் ஆல்மைட்டி’ என்கிற படம் நினைவுக்கு வருகிறது. அதில்
மார்கன் ப்ரீமேன் வருவார்.
அந்த இங்கிலீஷ் படம் பார்க்கிறவர்களுக்கு விஜய் சேதுபதி நடித்த ‘ஓ மை கடவுளே’ அந்த விதத்தில் வந்திருக்கும். இந்தப் படத்தில் சிவனே இறங்கி வருகிறார்.
இப்போது பேண்டஸி காலமாக இருக்கிறது. ராமாயணம் ,மகாபாரதம் எல்லாம் மீண்டும் வருகின்றன.
அது நமக்குப் பிடித்திருக்கிறது. அந்த விதத்தில் இந்தப் படமும் வந்திருக்கிறது.
உலகம் அழியப்போகிறது என்றெல்லாம் சொன்னார்கள் . உலகப்போர் வரும் என்றார்கள்.கோவிட் வந்தது. அப்போது நான் நினைத்தேன் ,நான் சத்தியமாக செத்துவிடுவேன் என்று . அதையும் தாண்டி இப்போது நமது வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு சுலபமாக நமக்குச் நம் சாவு வராது. அதுதான் பிரச்சினை.
இது ஒரு சுவாரசியமான கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களிடம் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்.
நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்திருக்கிறேன். ஊடகத்துறையில் இருந்திருக்கிறேன். 20 ஆண்டுகள் சினிமாவை தவிர்த்து நான் வெளியில் இருந்திருக்கிறேன். பெரிய நிறுவனங்களில் உயர் நிலையில் இருப்பவர்கள், ஒரு தென்னிந்தியப் பெண்மணி எந்த ஒரு உயர் பொறுப்பிலும் இருக்கவே மாட்டார். குறிப்பாகத் தமிழ் பெண்கள் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். அதிகபட்சம் ஆண்கள் தான் இருப்பார்கள் .வட இந்தியர்கள்தான் இருப்பார்கள். ஒரு மலையாளி கண்டிப்பாக இருப்பார் .அவரும் ஒரு நாயராகவோ மேனனாகவோ இருப்பார் .நாயர், மேனன் இல்லாத எந்த ஓர் உயர் பொறுப்பையும் நீங்கள் பார்க்கவே முடியாது. தென்னிந்தியப் பெண்களுக்கு வாய்ப்பே இல்லை. அரசியலும் அப்படித்தான். திரைப்படத்துறையிலும் அப்படித்தான் .எனக்கும் இந்தப் படத்திற்கும் எந்தப் சம்பந்தமும் இல்லை.
ஊடகங்கள் எப்போதும் என்னிடம் ஏதாவது கேள்வி கேட்டு அதற்கு நான் பதில் கொடுப்பேன் என்று நினைக்கிறார்கள். நானும் அதற்கு தயாராகத்தான் இருக்கிறேன்.இது என் படம் கிடையாது. இந்த பெண் இயக்குநருக்கு ஆதரவு கொடுப்பதற்குத்தான் நான் இங்கு வந்தேன். அது என்ன ஒரு விஷயம் பெண்கள் எது சொன்னாலும் அது சர்ச்சை ஆகிறது. அதற்கு ஏ சான்றிதழ் கொடுப்பீர்கள். அதை விமர்சனம் என்கிற பெயரில் எந்த அளவிற்கு ஒரு கேவலமான ஒரு விமர்சனம் செய்கிறார்கள். பிரதான ஊடகங்களை நான் சொல்லவில்லை. நிறைய யூடியூபினர் இருக்கிறார்கள். அவர்களைத்தான் சொல்கிறேன்.
படத்தை படைப்பு நோக்கத்தில் பார்ப்பது கிடையாது .ஏதோ ஒரு அறிவில் ஏதோ பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். அபத்தமாக இருக்கும்.
ஒரு திரைப்படம் என்பது எவ்வளவு முதலீடு செய்து எத்தனை பேருக்கு வாய்ப்பு கொடுத்து எவ்வளவு சிரமப்பட்டு எடுக்க வேண்டி இருக்கிறது . அவ்வளவு சிரமப்பட்டு அந்தப் படத்தை எடுத்தால் நீங்கள் எவ்வளவு சுலபமாக விமர்சனம் செய்க றார்கள்.ஒரு யூடியூப் வீடியோ எடுத்துக் கொண்டு வருவதற்கு எவ்வளவு தூரம் சிரமப்படுகிறீர்கள். மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்,
ஒரு யூட்யூப் வீடியோ அனுப்புவதற்கு இவ்வளவு சிரமப்படும்போது ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம்.அதை 100 திரையரங்கில் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அது விளையாட்டல்ல.கடைசியாக எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று தெரியுமா?
இவ்வளவு திறமை உள்ள ஆர்னிகாவின் வலி எனக்குத் தெரிகிறது. அவருடைய பயணம் எவ்வளவோ தடைகளைக் கடந்து இந்த நிகழ்ச்சி வரை வந்திருக்கிறார்.நாங்கள் எல்லாம் அவருக்கு ஆதரவு கொடுக்க வந்து இருக்கிறோம். பெண் இயக்குநர்களை இரண்டாம் இடத்தில் வைத்துப்பார்க்க வேண்டாம் .தமிழ் சினிமாவில் இன்றும் ஆண் பெண் பேதம் பார்ப்பது நிலவுகிறது . இது வெட்கப்பட வேண்டிய ஒன்று. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஒரு ஆண் காதலிக்கலாம் ஒரு பெண் காதலித்து விட்டால் ரொம்ப கேட்கிறீர்கள் .எதற்கு? ராஷ்மிகாவுக்கு ஏன் இவ்வளவு காதல் என்று.இவள் எதற்கு இவ்வளவு காதல் செய்கிறாள் என்று. அவள் காதலிக்கிறாள் அவளது இஷ்டம் . உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் நான் 100 முறை காதலைச் சொன்னவன் என்றால் அதையே சூர்யா சொன்னால் அதிசயம் ஆச்சரியம் என்கிறார்கள். அதையே ஒரு பெண் சொன்னால் அது தப்பாக இருக்கிறது ஏன் ?அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை .பாலினம் இதில் எங்கே வந்தது?
பெண்கள் காதலிக்கக் கூடாது, எதிலும் பற்றுள்ளவராக இருக்கக் கூடாது . அடல்ட் காமெடி கொடுக்கக் கூடாது .புதிதாக யோசிக்க கூடாது. நாங்கள் என்ன விஷயங்கள் எடுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யக்கூடாது. நம் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே பெண்கள் விமானம் ஓட்டுவதில் இருந்து எவ்வளவோ விஷயங்கள் நடந்து இருக்கின்றன. எவ்வளவோ பெண்கள் சாதித்து இருக்கிறார்கள். இன்றைக்கு இல்லை, அன்றைக்கு சமூக ஊடகங்கள் கிடையாது அவ்வளவுதான் .இன்று பெண்கள் மீது உள்ள அபிப்பிராயம் மிகவும் மோசமானது. ஒரு திருமணமான பெண்ணை 10 ஆண்டுகள் கழித்து கூட எவ்வளவு பேர் அந்த கல்யாணத்தைக் கெடுப்பதற்கு ரீல்ஸ் போடுகிறார்கள் . ரீல்ஸ் போடுவதற்கு ஒரு அளவில்லையா?
இது மாதிரி சமூக ஊடகங்களில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர் சிவக்குமாரை நான் பாராட்டுகிறேன். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தான் தேவை. தமிழ்ச் சமூகத்திற்கு நான் ஆதரவு தருகிறேன்! தமிழ்நாட்டிற்கு நான் ஆதரவு தருகிறேன்.
சினிமாவில் வெளியில் மாநிலத்திலிருந்து உள்ளவர்களுக்கு தான் வாய்ப்பு வருகிறார்கள். இங்குள்ள எத்தனை தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள்? எத்தனை பேர் நடிக்கிறார்கள்? சொல்லுங்கள் ,மிகவும் குறைவு. பாதிக்குப் பாதியாவது கொடுங்கள். பான் இந்தியா என்று சொல்லிக் கொண்டு மொத்தமாக எங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத அளவிற்குச் செய்து விட்டார்கள்.
இன்ஸ்டாகிராமில் பணம் கிடையாது. யூடியூபில் தான் பணம் வரும் .அப்படி இருக்கும் போது இன்ஸ்டா தங்களைக் காட்டிக் கொள்வதற்கான ஒரு மேடை அவ்வளவுதான் .அதிலிருந்து மேலே வந்து மக்களைச் சென்றடைந்து புகழ்பெற்றதற்கு பிறகுதான் வேலை வாய்ப்புகள் வரும். அப்படி வருகிறது என்றால் அதற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். இது மாதிரி நிறைய படங்கள் எடுக்க வேண்டும். நிறைய தயாரிப்பாளர்கள் வரவேண்டும். இப்போது பெரிய கதாநாயகர்கள் பலரும் நடிப்பதில்லை. இந்த மாதிரி நிறைய படங்கள் வரவேண்டும். அதற்கு ஆதரவு கொடுங்கள். விமர்சனம் என்கிற பெயரில் அநியாயம் செய்யாதீர்கள். தயவு செய்து விமர்சனம் என்கிற பெயரில் அநியாயம் செய்யாதீர்கள். ஒரு பெண் இயக்குநர் படம் எடுத்திருக்கிறார். தயவு செய்து ஆதரவு கொடுங்கள்
பெண் என்று பார்க்காதீர்கள். நீங்கள் ஒரு படமாகப் பாருங்கள் .பென் எடுத்ததற்காக என்று வேண்டாம் ஒரு படமாகப் பாருங்கள் .நான் நேர்மையாகக் கேட்கிறேன், உண்மையாக கேட்கிறேன். இவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் . உரிமையோடு கேட்கத் தோன்றியது சொல்கிறேன். ஆதரவு கொடுங்கள் ” என்றார்.