ஒரு காலத்தில் காதல் செண்டிமென்ட் படங்கள் எடுத்த எழில் தற்போது காமெடி களத்தில் பயணிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இயக்கிய வெற்றிப் படமான தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி உள்ளார்.
நாயகன் விமல், காமெடியன் புகழ் இருவருமே அருகருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி காமெடியாக மோதிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் மார்க்கெட் ராஜா என்ற பெரிய தாதாவை கொல்லும் ஒருவன் ராஜாவின் தலையை கொண்டு சென்று விடுகிறான். தலையை தேடும் பணியில் விமலும், புகழும் குதிக்கிறார்கள்.
இதற்கிடையில் லொள்ளுசபா சீனிவாசன் ஆர்டர் பண்ணிய ஆட்டுத் தலையை சிங்கம்புலி குழம்பு வைத்து சாப்பிடுகிறார். இரண்டு தலைகளின் குழப்பம், காணாமல் போன ரவுடி தலை இவற்றைக் கொண்டு கலகலவென ஒரு காமெடி படம் தந்திருக்கிறார் எழில்.
புகழின் லேடி கெட்டப், விமலின் டைமிங் காமெடி சிங்கம்புலி, சுவாமிநாதன், ரவி மரியா, சாம்ஸ், வையாபுரி என காமெடி சேர்ந்துள்ள காமெடி பட்டாளங்கள் இணைந்து சிரிக்க வைக்கிறார்கள். லாஜிக் பற்றி கவலைப்படாவிட்டால் இரண்டரை மணி நேரம் சிரிக்கலாம்.