‘அக்யூஸ்ட்’ பெரிய பட்ஜெட் படம்

ஜேசன் ஸ்டுடியோஸ் , சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் அக்யூஸ்ட். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் முதல் தேதியில் வெளிவருகிறது.

இதை முன்னிட்டு படத்தின் அறிமுக விழா நடந்தது. நிகழ்ச்சியில் நாயகன் உதயா பேசுகையில், ”மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அக்யூஸ்ட் ‘ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகங்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடை எனக்கு மிகவும் பிடித்த மேடை. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன். அதன் பிறகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கிய போது கேட்ட கதை தான் இந்த அக்யூஸ்ட் படத்தின் கதை.

இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காக காத்திருந்தேன். நான் இன்று வரை எந்த படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையை கேட்கத் தொடங்கினேன்.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது என்று சொல்லி புதிதாக கன்டென்ட் இருந்தால் அதை சொல்லுங்கள் என்றேன் . அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்த படம் உருவானது.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார்.

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை. சினிமாவிற்கு மூன்று நாட்கள் விமர்சனம் தேவையில்லை என்று சொன்னாலும் கூட சினிமா என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதனால் ஒவ்வொரு சினிமாவிற்கும் விமர்சனம் அவசியம் தேவை தான். அவை ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.

இந்தத் திரைப்படம் 2 மணி நேரம் 10 நிமிடம் வரை ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நல்ல கன்டென்ட், நல்ல படமாக வழங்கியிருக்கிறோம்” என்றார்.

Comments (0)
Add Comment