காயல்: கவிதையாய் காதல் கதை

பிரபல எழுத்தாளர் தமயந்தி, எழுதி, இயக்கி இருக்கும் படம். எழுத்தாளரின் படம் என்பதால் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஜாதி வெறியையும், அது நீர்த்து போகும் இடத்தையும் கவிதையாக சொல்லி இருக்கிறார்.

பெரியாரிஸத்தை பின்பற்றும் மலையாள தந்தைக்கும், ஜாதி வெறி பிடித்த ஆதிக்க ஜாதி தாயுக்கும் பிறந்த காயத்ரி முற்போக்கு சிந்தனை கொண்டவர். அவர் தமிழ் என்கிற புரட்சிகர சிந்தனை கொண்ட இளைஞனை காதலிக்கிறார். தமிழ் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் காயத்திரியின் தாய் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அம்மாவாவின் எதிர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளாகும் காயத்ரி கட்டாய திருமணத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். அவரது அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் செல்லும் வழயில் சந்தர்ப்ப சூழ்நிலையால் காயத்ரியின் முன்னாள் காதலன் தமிழை சந்திக்க நேர்கிறது. இந்த பயணத்தின் வழியாக ஜாதி வெறி பிடித்த தாயின் குணம் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு காயத்திரியை திரையில் பார்க்க முடிகிறது. சிறிய கேரக்டர் என்றாலும் கொடுத்ததை கச்சிதமாக செய்கிறார். ஜாதி வெறிபிடித்த தயாராக அனுமோல் மிரட்டுகிறார். அமைதியாக இருந்து கொண்டே அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார். லிங்கேஷ், ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக் ஆகியோரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளை பசுமையாக காட்டி இருக்கிறது கார்த்திக்கின் கேமரா, ஜஸ்டினின் பின்னணி இசை கதைக்கு இசைந்து இசைத்திருக்கிறது.
ஜாதி வெறிக்கு பலியாகும் காதல் குறித்து ஆயிரம் படமாவது வந்திருக்கும் இது அவற்றில் இருந்து மாறுபட்டு தனித்திருக்கும் படம். கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் ரசிக்க வைக்கிறது காயல்.

Comments (0)
Add Comment