தமிழ் சினிமாவில் அடிக்கடி அரசியல் படங்கள் வரும். ஆனால் அரசியலை கிண்டல் செய்யும் ‘பொலிட்டிக்கல் சட்டையர்’ வகை படங்கள் மிகவும் அரிது. இந்த நிலையில் அதிரடியாக களத்தில் இறங்கி இருக்கிறது ‘டிஎன் 2026’. தேர்தல் அனல் பறக்கும் இந்த நேரத்தில் எரிகிற நெருப்பில் எண்ணையாய் வந்து கலக்குகிறது படம்.
தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம். தர்புகா சிவா இசையமைப்பில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சினிமா என்னும் ஆயுதத்தை ஏந்திதான் அரசியலுக்கு வந்தவர்கள். அந்த வகையில் தற்போதைய ஒரு முன்னணி நடிகர் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் ஒன் லைன். இந்த கதையை விஜய் கதையாகவும் கொள்ளலாம், ரஜினி கதையாகவும் கொள்ளலாம்.
படத்தின் கதை இதுதான்… வடநாட்டை சேர்ந்த ஒரு இளைஞன் பாணிபூரி விற்க தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவனிடம் பானி பூரி வாங்க வரும் ஒரு இயக்குனர் அவனை ஹீரோவாக்குகிறார். பொள்÷£ச்சிக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அங்கு அறிமுகமாகிறார் பணக்கார மன்றாடியார் தம்பி ராமய்யா. இவன் பிற்காலத்தில் எம்ஜிஆர் போல் வருவான் என்று கணிக்கும் தம்பி ராமய்யா தனது சொத்துக்களை விற்று அவனை சூப்பர் ஸ்டார் ஆக்குகிறார். அடுத்த கட்டமாக அவரை அரசியலில் இறக்கி பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். மதுவுக்கும் பெண்ணுக்கும் அடிமையான அந்த சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வந்தாரா? முதல்வர் ஆனாரா, தம்பி ராமய்யாவின் கனவு நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் கதை.
‘200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு சந்தோஷம்; அதில் எனக்கு என்ன சந்தோஷம்’, ‘மனைவியுடன் பிரச்னை என்றால் டைவர்ஸ் செய்பவன் ஆண் இல்லை. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அனுசரித்து கடைசிவரை மனைவியுடன் இருப்பவன்தான் தமிழ்நாட்டில் ஆண்’, ‘தமிழ் ஒழுங்காக பேச வரவில்லையென்றால் நீ தமிழ்நாட்டில் பெரிய ஹீரோ’ என்பது மாதிரியான வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.
நட்டி ரஜினியையும் நினைவூட்டுகிறார், விஜய்யையும் நினைவூட்டுகிறார். இதுவரை இப்படி ஒரு நடிப்பை அவர் வெளிப்படுத்தியதில்லை. அவரது கேரியரில் இந்த படம் மைல் கல். எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமய்யா பண்ணும் அலப்பரைகள் சிரிப்பு தோரணம் கட்டுகிறது. ரஜினி வாழ்க்கையில் தொடங்கி இடையில் விஜய்யை மல்லுகட்டி முடிவில் ரஜினி பார்வையில் முடிகிறது.
அரசியல், லாஜிக் இவற்றை தூக்கிப்போட்டுவிட்டால் கொடுக்கிற காசுக்கு வஞ்சனையில்லாமல் சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள்.