‘மீசைய முறுக்கு 2’வில் கானா கலைஞர்களின் வாழ்க்கை: ஹிப்ஆப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள படம் ‘மீசைய முறுக்கு 2′ . கதாநாயகியாக கெட்டிகா சர்மா நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ‘லைலா சிங்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் நடனக் கலைஞராக அவர் தோன்றுகிறார்.

இசை, நடனம், லட்சியம் மற்றும் காதல் என வெவ்வேறு உலகங்களை ஒன்றிணைக்கும் கதைக்களமாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகியுள்ளது. இளமைத் துடிப்புடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களோடு, இசைக் கலைஞர்களின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வருகிற 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து ஹிப்ஆப் தமிழா ஆதி நிருபர்களிடம் கூறியதாவது:
‘மீசைய முறுக்கு’ என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக். ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ அதைவிட மிகவும் பரந்த கதைக்களத்தைக் கொண்டது. இது இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது.

‘மீசைய முறுக்கு 2’ படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கானா கலைஞர்களின் உலகமும் அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகத்தை இப்படம் பதிவு செய்கிறது. குறிப்பாக, கானா கலைஞர்கள் தங்களது போராட்டங்கள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் பயணங்களை பாடல்களாக வெளிப்படுத்தி, தங்களது கலையின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்களது கதைகளும், அவர்கள் வாழும் உலகமும் இந்தப் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. அவர்களது குரலையும் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கனவுகளை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு இந்தத் துறைக்குள் வந்தவன் நான். இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த, அனைவரும் முக்கியமான ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். இந்தப் படத்தை உருவாக்குவதற்கும், மக்களிடம் கொண்டு செல்வதற்கும் உறுதுணையாக இருந்த சுந்தர் சி சார் மற்றும் குஷ்பு மேடம் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது.

இசையை மையமாகக் கொண்ட கதை, வண்ணமயமான கதாபாத்திரங்கள், காதல், நடனம், இளமை, போராட்டம் மற்றும் கனவுகள் என பல்வேறு உணர்வுகளை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கனவுகளையும் எல்லைகளைக் கடந்து உலக ரசிகர்களிடம் கொண்டு செல்ல தயாராகியுள்ளது. என்றார்.

Comments (0)
Add Comment