தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி உள்ள அதிரடி ஆக்ஷன் படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆர்யாவிற்கு கிடைத்த மைல்கல்.
‘அனந்தன் காடு’ 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களின் ஆரம்பத்திலும் நடப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை, கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான் என நீண்ட பரப்பை கொண்ட கதை.
ஈழப் போராளியான ஆர்யா. போராட்ட குழு தலைவரால் ஒரு முக்கிய பணிக்காக இந்தியா அனுப்பி வைக்கப்படுகிறார். கடல்வழியாக திருவனந்தபுரம் வரும் ஆர்யா, தமிழ் நாட்டில் இயக்க பணிகள் செய்யும் போஸ் வெங்கட் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு கேரள முதல்வரின் அடியாட்களாக செயல்படும் ஒரு கூட்டத்தில் இணைகிறார். ஒரு கட்டத்தில் முதல்வர் தனது அரசியல் எதிரி ஒருவரை கொலை செய்ய அந்த கூட்டத்திற்கு அசைன்மெண்ட் தருகிறார். அந்த எதிரிதான் ஆர்யாவிற்கும் எதிரி. அவரே முன்னின்று இந்த அசைன்மெண்டை முடிக்கிறார்.
ஆனால் மத்திய அரசு எந்திரம் முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணை அறிவிக்க இவர்களை அழிக்க திட்டமிடுகிறார் முதல்வர். சம்பந்தப்பட்டவர்களை முதல்வரிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார் குழுவின் தலைவர் இந்திரன். அது நடந்ததா? ஆர்யா என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கதை.
ஈழத்து போராட்டம், கேரள அரசியல், தமிழ்நாட்டு துரோகம் என அனைத்தையும் கையில் எடுத்து பரபர ஆக்ஷன் படத்தை அரசியல் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார். ஆர்யா, முரளி கோபி, இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், நிகிலா விமல், ரெஜினா கசாண்ட்ரா, தேவ் மோகன் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
யுவாவின் ஒளிப்பதிவும், அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்தி பிடிக்கிறது. ஆர்யா ஆக்ஷன் காட்சியிலும், நெகிழ்ச்சியான காட்சியிலும் தனித்தனி உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆக்ஷன், அரசியல், திகில், சென்டிமெண்ட் என எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்கிறது அனந்தன் காடு.