ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு துப்புரவு பணியாளரின் மகனான ஒரு தடகள விளையாட்டு வீரன் திறமை, வெற்றிகள் இருந்தும் தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து தனது அங்கீகாரத்திற்காக நடத்தும் சட்டப் போராட்டமே படம்.
சென்னை மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர் ரமாவிற்கு ஒரு மகன், ஒரு மகள். கணவனை இழந்த அவர் தன் பிள்ளைகளை உயர்த்த வேண்டும் என்று கனவு காண்கிறார். தன் மகன் (நாயகன் கேஜேஆர்) விளையாட்டுத் துறையில் ஆர்வமாக வளர்வதை கண்டு அவனை ஓட்டப்பந்தைய வீரனாக்குகிறார்.
கலந்து கொள்ளும் போட்டியில் எல்லாம் சாதனை படைக்கும் அவர் காமென்வெல்த் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்படுகிறார். இதற்காக சட்டப் போராட்டம் நடத்தும் அவர் ஒரு கட்டத்தில் காமென்வெல்த் போட்டிக்கே தடை கேட்டு வழக்கு போடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஒரு விளையாட்டு வீரனாக உடலையும், மனதையும் வருத்தி நடித்து கைதட்டல் பெறுகிறார் நாயகன் கொட்டப்பட்டி ஜே.ராஜேஷ். விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்பட எல்லாக் கேரக்டர்களும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். ஜிப்ரான் பின்னணி இசை கதையிலுள்ள கனத்தை நமக்கு கடத்துகிறது. ‘சட்டம் படித்த சான்றோரோ’ என ஒலிக்கும் வைக்கம் விஜயலட்சுமியில் குரல் கலங்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ஓட்டப்பந்தைய காட்சிகளை அதன் தாக்கம் குறையாமல் பதிவு செய்திருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட இளைஞன் திறமை இருந்தும் தனக்கான அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை சமரசமின்றி சொல்லியுள்ளார் இயக்குநர் தென்பதியன். கோர்ட் காட்சிகளுக்கு கத்தரி போட்டிருந்தால், பெண் கேரக்டர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் அதிகரித்திருக்கும்.