அன்பே டயானா: மொழி, இனம் கடந்த காதல்

வடசென்னையின் அட்ராக்ஷனான பெரம்பூர்தான் கதை களம். அந்த பகுதியை சேர்ந்த ரிட்டையர்ட் ரெயில்வே எம்ளாய் சேத்தனின் மகன் பாரி இளவழகன். அம்மா ரோஜா கொஞ்சம் ஜாதி பற்று மிக்கவர். தன் ஜாதிதான் தன்னை வாழவைத்ததாக நம்பும் அவர் தன் பிள்ளைகளுக்கு தன் ஜாதியில்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற உறுதியோடு இருக்கிறவர். இந்த நிலையில்தான் பாரி இளவழகனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான ரம்யா ரங்கநாதனுடன் காதல் வருகிறது. இந்த காதல் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. காதல் கைகூடியதா என்பதுதான் படத்தின் கதை.

‘ஜமா’ என்கிற அற்புதமான படத்தை கொடுத்த பாரி இளவழகன், பக்காவாக ஒரு கமர்ஷியல் காதல் படத்தை தந்திருக்கிறார். வடசென்னை காதல் கதை புதிதில்லை என்றாலும், தெலுங்கு பையன், ஆங்கிலோ இந்திய பெண் என்கிற புதிய நூல் பிடித்த இந்த காதல் கொடியை நெய்திருக்கிறார். ஜமா படத்தில் பெண்ணியம் கலந்த ஒரு ஆணாக நடித்த பாரியா இப்படியொரு கலகல கேரக்கடரில் நடித்திருக்கிறார் என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். காமெடியும் நன்றாக வருகிறது. அவருக்கு துணையாக பரிதாபங்கள் கோபி கம்பெனி கொடுத்திருக்கிறார்.

நாயகி ரம்யா ரங்கநாதன் ஆங்கிலோ இந்திய பெண்ணை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். அவரது நாகரீக உடைகள், ஸ்டைல், எல்லாமே மிரட்டல் ரகம். அதே நேரத்தில் காதல் என்று வரும்போது கலங்கவும் வைத்து விடுகிறார். டெரரான தெலுங்கு ஆன்டியாக ரோஜா மிரட்டுகிறா£ர், சேத்தன் அனுபவ நடிப்பை தந்திருக்கிறார்.

பெரம்பூரையும் கொடைக்கானல் போல காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். பரத் சங்கரின் பாடலும், பின்னணி இசையும் இதம்.
வழக்கமான சில காட்சிகள் இருந்தாலும் புதுமையான கதை, திரைக்கதையால் டயனாவை ‘அன்பே…’ என்று தைரியமாக அழைக்கலாம். பாரியும் கமர்ஷியல் இயக்குநராக பாஸாகி இருக்கிறார்.

Comments (0)
Add Comment